சுக்மா 2026 போட்டிக்கான ஏற்பாட்டுச் செலவு 67 % குறைப்பு

22 ஜூலை 2026, 10:08 AM
சுக்மா 2026 போட்டிக்கான ஏற்பாட்டுச் செலவு 67 % குறைப்பு

கோலாலம்பூர்,ஜூலை 22 — இவ்வாண்டு சிலாங்கூரில் நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுச் செலவுகள் 67 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் மொர்டி பிமோல் தெரிவித்தார்.

செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வளங்களைச் சரியாகப் பயன்படுத்தியதின் மூலம் இந்த நிதி சேமிப்பை மேற்கொள்ள முடிந்திருப்பதாக அவர் கூறினார்.

செலவு குறைக்கப்பட்டாலும், ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் பாதுகாப்பு, வீரர்களின் நலன் அல்லது போட்டியின் தரம் ஆகியவற்றில் எந்தவொரு சமரசமும் ஏற்படுத்தப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுப் போட்டிகள் தேவையான தரத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள வசதிகள் தேவைப்படும் இடங்களில் மட்டுமே மேம்படுத்தப்படும். இதன் மூலம் போட்டிகள் முடிந்த பின்னரும் உள்ளூர் சமூகம் இந்த வசதிகளால் தொடர்ந்து பயனடைய முடியும்,” என அவர் இன்று மேலவை கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.

2026 சுக்மா போட்டிக்கான செலவுக் குறைப்பு உத்திகள் குறித்து, மத்திய அரசு, SUKMA உயர்நிலைக் குழு மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து செனட்டர் தியூ வே கெங் எழுப்பிய கேள்விக்கு மொர்டி இவ்வாறு பதிலளித்தார்.

முந்தைய போட்டிகள் போல் இல்லாமல் , இம்முறை 2026 சிலாங்கூர் சுக்மா செயலகம் , சுமார் 12 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தினசரி அலவன்ஸ் செலவுத் தொகையை மட்டுமே வழங்கும்.

அதே நேரத்தில் தங்குமிடம், உணவு ,போக்குவரத்துச் செலவுகள் ஆகியவற்றை அந்தந்த மாநிலக் குழுக்களால் நிர்வகிக்கப்படும் என்றும் மொர்டி விளக்கினார்.

ஒருங்கிணைந்த விளையாட்டு கிராமம் (Games village) இல்லாமல், பரவலாக்கப்பட்ட முறையில் போட்டிகளை நடத்துவது சிலாங்கூரில் உள்ள உள்ளூர் வணிகங்களுக்கும் சமூகங்களுக்கும் நேரடி பொருளாதார நன்மைகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

“இதன் காரணமாக, மாநிலக் குழுக்களால் மொத்தம் 640 தங்குமிட வளாகங்கள் பயன்படுத்தப்படும். இது தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஹோம்ஸ்டே வழங்குநர்கள் மற்றும் உள்ளூர் வணிகர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகள் மூலம் பொருளாதார ரீதியாக பயனடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்,” என்றாரவர்.

மத்திய அரசின் நிதி உதவி குறித்து செனட்டர் லாரி அசாப் கேட்ட துணை கேள்விக்கு பதிலளித்த மொர்டி, விளையாட்டுப் போட்டிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய இளைஞர் விளையாட்டு அமைச்சு சுமார் RM1.75 மில்லியன் நிதி உதவி வழங்கும் என்று தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.