கிள்ளான், 22 ஜூலை: மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டை ஏற்கனவே எதிர்கொண்டுள்ள ஆய்வக உதவியாளரான ஆர். சக்தி கணபதி , தனக்கு எதிரான போதைப்பொருள் குற்றச்சாட்டின் பிரதிநிதித்துவ நிலையைத் (Status Representation) தீர்மானிப்பதற்கான அடுத்த தேதியாக வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது.
1952-ஆம் ஆண்டு அபாய போதைப்பொருள் சட்டத்தின் 15-ஆம் பிரிவின் கீழ் உள்ள குற்றச்சாட்டுக்கான ஆவணங்களை ஆய்வு செய்ய தற்காப்புத் தரப்பிற்கு அவகாசம் தேவை என்று குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நூர் அஜிலா மாட் இந்தத் தேதியை அறிவித்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களைத் தற்காப்புத் தரப்பு பெற்றுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது சட்டச் சேவையை நாடியுள்ளத் தரப்புடன் கலந்துலோசித்த
பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் அரவிந்த் ராஜ் கூறினார்.
திருத்தம் செய்யப்பட்ட குற்றச்சாட்டின்படி, 28 வயதான சக்திகணபதி, கடந்த மார்ச் 29 -ஆம் தேதி மதியம் மணி 3.30 அளவில் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் , தனது உடலில் 'டெட்ராஹைட்ரோகன்னாபினோல்' (Tetrahydrocannabinol - THC) என்ற போதைப்பொருளைச் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1 அன்று, அதே நேரத்தில் அதே இடத்தில் 'பென்சோடியாசெபைன்' (Benzodiazepines) மற்றும் THC போதைப்பொருட்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதாகப் பதிவாகியிருந்தது.
ஆனால், பின்னர் ஜூன் 3-ஆம் தேதி அவர் தான் 'குற்றவாளி அல்ல' என தனது வாக்குமூலத்தை மாற்றினார்.
1952-ஆம் ஆண்டு அபாய போதைப்பொருள் சட்டத்தின் 15(1)(a)- பிரிவின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாமல் போலீஸ் கண்காணிப்பில் வைத்தல் ஆகிய தண்டனைகளை விதிக்க சட்டம் வகை செய்கிறது.
மற்றொரு தனிப்பட்ட குற்றச்சாட்டில், சக்திகணபதி கடந்த மார்ச் 29-ஆம் தேதி காலை 11.47 மணியளவில் கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில், போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தில், 33 வயதான பொருள் விநியோக ஊழியர் அமிருல் ஹபீஸ் ஓமாரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.



