ஷா ஆலாம், ஜூலை 22 – கடந்த ஜூலை 15 அன்று தொடங்கப்பட்ட ‘அம்புலன்ஸ் கித்தா சிலாங்கூர்’ (AKS) திட்டத்தின் இரண்டாம் கட்டம், அவசரமில்லாத மருத்துவப் போக்குவரத்து சேவைகளுக்காக குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் ஆயிரக்கணக்கான ரிங்கிட்டைச் சேமிக்க உதவியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஜூன் 2026 வரை, இச்சேவையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்திய நோயாளிகள் உட்பட 103 பயனாளிகள் சம்பந்தப்பட்ட 374 சம்பவங்கள் கையாளப்பட்டுள்ளன என சிலாங்கூர் மாநிலத்தின் மலேசிய செயின்ட் ஜான் அம்புலன்ஸ் -சின் (SJAM) நடவடிக்கைப் பிரிவின் தலைவர் எங் சீ காய் தெரிவித்தார்.

"அவர்களில் சிலர் ஒவ்வொரு வாரமும் முன்பதிவு செய்கிறார்கள், மேலும் 10 தடவைகளுக்கும் மேலாக இந்தச் சேவையைப் பயன்படுத்திய நோயாளிகளும் உள்ளனர்," என்று அவர் கூறினார்.
இந்தச் சேவை, வழக்கமான பரிசோதனைகள், தொடர் சிகிச்சைகள் அல்லது மருத்துவமனைகளில் காந்த அதிர்வு இமேஜிங் (MRI) ஸ்கேன் போன்ற நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டிய முதியவர்கள், படுத்தப் படுக்கையாக உள்ள நோயாளிகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுபவர்கள் ஆகியோரின் அவசரமில்லாத மருத்துவ அழைப்புகளை அதிகம் ஏற்கின்றது.
இச்சேவையை, மாதாந்திர குடும்ப வருமானம் 5,000 ரிங்கிட்டுக்கும் மேற்போகாமல் உள்ள சிலாங்கூர் மாநில குடியிருப்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த அம்புலன்ஸ் சேவையைப் பெற, அருகிலுள்ள மாநில சட்ன்ற உறுப்பினரின் சமூக சேவை மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த சமூக சேவை மையம் ஆவணங்களைச் சரிபார்த்தவுடன், அந்தத் தகவலை அம்புலன்ஸ் பிரிவுக்கு அனுப்பி வைக்கும். பின்னர் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய விண்ணப்பம் செய்த நபரை ஆம்புலன்ஸ் தரப்பினர் தொடர்பு கொள்வார்கள் என எங் சீ காய் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு பகுதியின் தேவையைப் பொறுத்து அனுப்பப்படும் அம்புலன்ஸ்களின் எண்ணிக்கை மாறுபடும் என்று எங் கூறினார்.
நகர்ப்புறங்களில் இரண்டு அம்புலன்ஸ்கள் வரையிலும், கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் ஒரு அம்புலன்ஸும் செயல்பாட்டில் இருக்கும்.
"எங்கள் சேவை வரம்பு பரவலானது, சிலாங்கூரிலிருந்து கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கான பயணங்கள் கூட இதில் அடங்கும்" என்றாரவர்.
தகுதியுள்ள சிலாங்கூர்வாசிகள் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுவாக அம்புலன்ஸ் சேவைக்கான கட்டணம் சுமார் 100 ரிங்கிட்டில் தொடங்கி, பயணிக்க வேண்டிய தூரத்தைப் பொறுத்து ஆயிரக்கணக்கான ரிங்கிட் வரை செல்லக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"வடக்கு சிலாங்கூரிலிருந்து தெற்கு நோக்கிய பயணங்களுக்கு, செலவு ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை எட்டக்கூடும்.
கோலா சிலாங்கூரிலிருந்து கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு நாங்கள் நோயாளிகளை ஏற்றிச் சென்றுள்ளோம். ஆக, இலவசமாக வழங்கப்படும் இந்த அம்புலன்ஸ் கித்தா சிலாங்கூர் சேவை அவர்களின் நிதிச் சுமையைப் பெரிதும் குறைக்க உதவியிருப்பதாக அவர் கூறினார்.
சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் மட்டுமே இந்த இலவச அம்புலன்ஸ் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் என்றும், மாநில எல்லைப் பகுதிகளிலிருந்து வரும் விண்ணப்பங்கள் அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினரின் சமூக சேவை மையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும் என்றும் எங் குறிப்பிட்டார்.






