புது டில்லி, ஜூலை 21 - இந்தியாவின் இளைஞர்கள் தலைமையிலான "கரப்பான் பூச்சி" இயக்கம் தனது போராட்டத்தைத் தொடரும் என்றும், ஆனால் இனி பேரணிகள் நடத்தாது என்றும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் நடத்தவிருந்த பேரணியைத் தடுக்க முயன்ற போலீசாருடன் ஏற்பட்ட மோதலில், ஏராளமான ஆதரவாளர்கள் காயமடைந்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய டெல்லியில் திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் 118 பாதுகாப்பு - போலீஸ் படையினர், 60 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 180 பேர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர்.
ஒரு இணையவழி கேலியாக தொடங்கிய இந்த கரப்பான் பூச்ச்சி இயக்கம் (Cockroach Janta Party), தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
"காக்ரோச் ஜனதா கட்சி" (CJP) என்று தங்களுக்குத் தாங்களே பெயரிட்டுக் கொண்ட இந்த சில மாதங்களே ஆன இயக்கம், மில்லியன் கணக்கான இளம் ஜென் ஜி (Gen Z) இந்தியர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
கடந்த மே மாதம் 2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களைப் பாதித்த தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இவ்வியக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இளைஞர்கள் மேலும் காயமடைவதை விரும்பாததால், நேற்று போராட்டத்தை மீட்டுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதாக சிஜேபி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.






