சிலாங்கூரின் இலவச டியூஷன் திட்டம் ; 180,000 மாணவர்கள் பயன்

17 ஜூலை 2026, 9:58 AM
சிலாங்கூரின் இலவச டியூஷன் திட்டம் ; 180,000 மாணவர்கள் பயன்

ஷா ஆலாம், ஜூலை 17 – சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 160,000 மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், 20,000 ஆரம்பப்பள்ளி மாணவர்களும் தங்களின் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக, சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டத்தின் (PTRS) கீழ் பயனடைந்துள்ளனர்.

அத்திட்டம்,எஸ்பிஎம் (SPM) தேர்வுக்கான மாநில சராசரி தரவரிசை (GPN) தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உயர்வதற்குப் பங்களித்துள்ளது என மாநில மெந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும், கிராமப்புறங்களில் வாழும் மாணவர்களும் கல்வித்துறையில் சிறந்த விளங்குவதற்கும், சமமான கல்வி வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதி செய்வதற்காகவே PTRS திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தின் SPM தேர்வுக்கான GPN தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. இது 2023-இல் 4.67 ஆகவும், 2024-இல் 4.59 ஆகவும், தற்போது 2025-இல் 4.52 ஆகவும் பதிவாகியுள்ளது.

பள்ளி நேரத்திற்குப் பிறகு PTRS வகுப்புகளில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் வெற்றியை இந்த எண்கள் நிரூபிக்கின்றன.

இந்த மாணவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டதுடன், தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் உடனிருந்து வழிகாட்டினர், என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த சாதனைகளை வலுப்படுத்தும் நோக்கில், நடப்பு ஆண்டில் இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) பாடத் திட்டங்களைச் சேர்த்து PTRS திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமிருடின் மேலும் கூறினார்.

ePTRS தளமும் மேம்படுத்தப்பட்டு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நேரடி இருவழித் தொடர்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே, கல்வி வழிகாட்டு வகுப்புகள் (Tuisyen) மிகவும் விலை உயர்ந்தவை அல்லது தூரமாக உள்ளன என்று சொல்வதற்கு இனி எந்தக் காரணமும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

மாநிலக் கல்விப் பொறுப்பை வகிக்கும் மெந்திரி பெசார் , அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுப் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக, சுமார் 17,000 மாணவர்கள் 'திடிக் காசிஹ்' திட்டத்தின் (Program Didik Kasih) கீழ் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.