கோலாலம்பூர், ஜூலை 16 - 70 வயதுக்கு மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் போது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தை தற்போது அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.
மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (Miros) ஆராய்ச்சியும், அனைத்துலக ஆய்வுகளும், வயது அடிப்படையிலான மருத்துவப் பரிசோதனைகள் சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்குமென காட்டவில்லை.
எனவே, உறுதியான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் அத்தகையதொரு மருத்துவப் பரிசோதனையை உட்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லையெனபோக்குவரத்துத் துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார்.
மக்களவையில் பதிலளித்த அவர், "ஒருவருக்கு வயது கூடிவிட்டது என்பதற்காக அவர் வாகனத்தை ஓட்டும் திறனை இழந்துவிட்டார் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு நபரின் ஆரோக்கியமும் ஓட்டும் திறனும் மாறுபடும்" என்று கூறியதோடு, பல முதியவர்கள் இன்னும் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் வாகனம் ஓட்டும் திறன் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓட்டுநர்கள் தங்களது உரிமங்களைப் புதுப்பிக்கும்போது மருத்துவப் பரிசோதனையை அரசாங்கம் கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளதா என்று மெர்போக் சட்டமன்ற உறுப்பினர் நஸ்ரி அபு ஹாசன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது ஹஸ்பி இவ்வாறு கூறினார்.
வயதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கட்டுப்பாடுகளை விதிப்பது முதியவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதையும், அன்றாட வேலைகளைச் செய்வதையும், சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதையும் கடினமாக்கலாம் என்று ஹஸ்பி கூறினார்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த மொத்த சாலை விபத்துகளில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 3.5 விழுக்காடு விபத்துகளில் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தனர் என்றும், அதே வேளையில் 16 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 69.4 விழுக்காடு விபத்துகளில் சம்பந்தப்பட்டிருந்தனர் என்றும் அவர் கூறினார்.
இந்த புள்ளி விபரம் முதியவர்கள் தான் விபத்துகளுக்குக் காரணம் என்பதைக் காட்டவில்லை என ஹஸ்பி குறிப்பிட்டார்.



