கோலா சிலாங்கூர்,ஜூலை 15: சிலாங்கூர் ஃபுரூட் வேலி (SFV), இவ்வாண்டு ஒரு லட்சத்து 50,000 பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் கிளம்பிங்- முகாமிட்டுத் தங்குதல் (glamping), வெண்ணிலா கஃபே ( vanilla cafe) மற்றும் அரிய வகை பழத்தோட்டம் ஆகிய மூன்று புதிய ஈர்ப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
2027-ஆம் ஆண்டு மத்தியில் செயல்படத் தொடங்கும் கிளம்பிங் வசதி, பார்வையாளர்களைக் கவரும் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இருக்குமென சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் குழுமத் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் முகமட் கைரில் முகமது ராசி தெரிவித்தார்.
தற்போது அந்த புதிய ஈர்ப்பு இன்னும் திட்டமிடலுக்கான அனுமதியைப் பெறும் கட்டத்தில் இருப்பதால், 2027 மத்தியில் அது செயல்படும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
இந்த ஃபுரூட் வேலியின் மற்றுமோர் புதிய ஈர்ப்பாக விளங்கவிருக்கும் வெண்ணிலா கஃபே- பான விடுதி அக்டோபரில் திறக்கப்படவுள்ளது.
இது தவிர, பெலிம்பிங் புலு (belimbing buluh), பெருவாஸ் (beruas), கண்டிஸ் புருங் (kandis burung), ஜெந்திக்-ஜெந்திக் (jentik-jentik), மெந்தேகா (mentega), பெத்தாய் (petai), முந்திரி (gajus) மற்றும் தம்போய் (tampoi) போன்ற பல்வேறு வகையான உள்ளூர் அரிய பழ வகைகளைச் சேகரிப்பதற்காக அரிய வகை பழத்தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று முகமட் கைரில் கூறினார்.
ஊடகவியலாளர்கள், content creators எனப்படும் சமூக உள்ளடக்கங்களைத் தயாரிப்பவர்கள் ஆகியோருடன் இணைந்து சிலாங்கூரின் இந்த பழத் தோட்டத்தை சுற்றிப் பார்க்கும் திட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் முகமட் கைரில் இந்த விபரங்களைத் தெரிவித்தார்.





