கோலாலம்பூர், ஜூலை 14 – உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியால் கடுமையான செலவினச் சுமையை எதிர்கொண்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு உதவ, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவை அத்துறையினருடன் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
மலேசியாவின் உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, தேசிய பொருளாதார நடவடிக்கை குழு (MTEN) கூட்டத்தில் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டதாகக் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, உணவுப் பொட்டலமிடுதல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E), வாகனத் தயாரிப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற முக்கியத் துறைகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கி வரும் பிளாஸ்டிக் தொழில்துறை குறித்து இக்கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
முன்னதாக இது குறித்துப் பேசிய பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிர், பல முக்கியத் துறைகளுக்கு பிளாஸ்டிக் தொழில்துறை மிக முக்கியத் துணைத் தூணாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
இத்துறை 2024-இல் 64.78 பில்லியன் ரிங்கிட் விற்பனையைப் பதிவு செய்திருந்த வேளையில், 2025-ஆம் ஆண்டில் 62.69 பில்லியன் ரிங்கிட் விற்பனையை மட்டுமே ஈட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் தொழில்துறை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகும்போது, அதன் தாக்கம் உணவுப் பொட்டலங்கள், உதிரிபாகங்கள், வாகனத் துறை, மருத்துவ உபகரணங்கள், கட்டுமானம், விவசாயம் மற்றும் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி எனப் பல துறைகளுக்கும் பரவக்கூடும்.







