ஷா ஆலம்,ஜூலை 12 - ரவாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் சில மாணவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பகடிவதை சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பொதுமக்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
அதையடுத்து, அந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்கு சிலாங்கூர் கல்வித் துறை முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இதில் தொடர்புடைய எந்தவொரு தனிநபரையும் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதுள்ள விதிமுறைகளின்படி குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரவாங்கில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பான சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் காணொளியை சிலாங்கூர் கல்வித் துறை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
எனவே,அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு பொதுமக்கள் மதிப்பளிக்குமாறு சிலாங்கூர் கல்வித் துறை கேட்டுக் கொண்டது.- பெர்னாமா



