LPT விபத்து: 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டதாக போலீஸ் சந்தேகம்
குவந்தான், ஜூலை 11 — கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் (LPT) 246.4-வது கிலோமீட்டரில், இன்று அதிகாலை நேர்ந்த விபத்தில் காயமடைந்த மொத்தம் 20 பேர் இங்குள்ள இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
விபத்தில் காயமடைந்த 18 பேர் தெங்கு அம்புவான் அஃப்ஜான் மருத்துவமனையிலும் (HTAA), மேலும் இருவருக்கு சுல்தான் அஹ்மத் ஷா மருத்துவ மையத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டதாக குவந்தான் மாவட்ட போலிஸ் தலைவர் ஏ.சி.பி அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
விசாரணையில், சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இந்த விபத்தில் சிக்கியதும், இதில் நான்கு பேர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளதாக அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
முன்னதாக, அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், யமஹா ஆர்.எக்ஸ்.இசட் (Yamaha RXZ) மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற நால்வர் உயிரிழந்தனர்.
ஒரு மோட்டார் சைக்கிள் காரின் பின்புறத்தில் மோதி வலதுபுற பாதையில் விழுந்ததால், மற்ற பல மோட்டார் சைக்கிளோட்டிகள் மோதி தொடர் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.— பெர்னாமா



