குவாந்தான்,ஜூலை 11 - இன்று சனிக்கிழமை அதிகாலையில், கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் (LPT) 246.4-வது கிலோமீட்டரில் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்தில், நான்கு யமஹா RX-Z மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை மணி 1.20-அளவில் நடந்த இந்த விபத்தில், சே முகமட் சுஃபியான் சே கானி (40), முஹம்மது ஹபீஸ் அல் ஹக்கீம் மஸ்லான் (33) மற்றும் முகமட் ஐசாட் ஹுஸ்னி (33) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் அஷாரி அபு சாமா உறுதிப்படுத்தினார்.
மேலும், முஹமட் சஃபாவி மொட் நோஹ் (24) என்ற மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி, தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் (HTAA) சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்.
டொயோட்டா விவோஸ் காரின் பின் இருக்கையில் பயணித்த நூர் ஐரிஷ் அடேலியா அஜீஸ் (13) என்ற சிறுமி கழுத்தில் காயமடைந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரை ஓட்டிய முஹம்மட் இர்ஃபான் அஜீஸ் (25) என்பவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கிய மற்ற எட்டு மோட்டார் சைக்கிளோட்டிகளின் விவரங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
முதற்கட்ட விசாரணையின்படி, சம்பந்தப்பட்ட கார் குவாந்தானில் இருந்து கெமமான் நோக்கி வலதுபுற பாதையில் நேராகச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஒரு மோட்டார் சைக்கிள், காரின் பின்புறத்தில் மோதியது.
அதைத் தொடர்ந்து, அந்த மோட்டார் சைக்கிளோட்டி வலதுபுற பாதையில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதனால் பின்னால் வந்த மற்ற மூன்று மோட்டார் சைக்கிளோட்டிகளால் தவிர்க்க முடியாமல் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர்.





