ஹொன் அடித்ததற்காக கத்தியால் வெட்டிய சாலை முரடனுக்கு 10 ஆண்டுகள் சிறை
ஷா ஆலாம், ஜூலை 8 - ஹோன் அடித்த ஒரே காரணத்திற்காக, சினமுற்று கடந்த மாதம் கூட்டரசு நெடுஞ்சாலையில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை இறைச்சி வெட்டும் கத்தியைக் கொண்டு தாக்கிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
ஷா ஆலாம் சேஷன் நீதிமன்றம்,கைது செய்யப்பட்ட தேதியான ஜூன் 11-ஆம் தேதியிலிருந்து, 43 வயதான அஸ்மி ஜந்தானுக்கு (Azmi Jantan) எதிரான தண்டனை நடைமுறைக்கு வருமென தெரிவித்தது.
மரணத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதத்தைப் பயன்படுத்தி, நிறுவனமொன்றின் நிர்வாகியான 45 வயதான மொஹமட் ஃபைய்ரூஸ் ஜாஃபார் என்பவருக்கு கடுமையான காயத்தை விளைவித்ததாக அஸ்மி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கூட்டரசு நெடுஞ்சாலையின் செக்ஷன் 13-இல் நிகழ்ந்த அந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு தோள்பட்டை எலும்பு, கை எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, தலையில் காயங்கள் ஏற்பட்டன.



