காஜாங், ஜூலை 7 - சாலையோரம் காரின் டயரை மாற்றியப் பின்னர், வாகனமோட்டிகளின் எச்சரிக்கைக்காக வைத்திருந்த வாலியை எடுக்க சென்ற ஆடவர், எம்.பி.வி-MPV காரால் மோதப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்றிரவு திங்கட்கிழமை மணி 10 வாக்கில் செராஸ்-காஜாங் நெடுஞ்சாலையின் 13வது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 46 வயதுடைய அந்த உள்நாட்டு ஆடவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, 5 பயணிகளுடன் தொயோத்தா இனோவா காரை ஓட்டிய பாதிக்கப்பட்ட நபர், கார் டயர் பழுதடைந்ததை அடுத்து, தனது காரை நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தியிருந்தார்.
டயரை மாற்றியப் பின்னர் அவர், காரின் பின்புறம் வாகனமோட்டிகளின் எச்சரிக்கைகாக தான் வைத்திருந்த வாலியை எடுக்கச் சென்றிருந்தார்.
அப்போது மற்றொரு தோயோத்தா இனோவா கார் அவரை மோதித் தள்ளி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக நாஸ்ரோன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.



