புத்ராஜெயா, 5 ஜூலை: நாடு முழுவதும் முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் நான்காம் ஆண்டு கற்றல் மேட்ரிக்ஸ் (Matriks Pembelajaran Tahun Empat) தேர்வை, சுமார் 400,000 நான்காம் ஆண்டு மாணவர்கள் வரும் அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை ஒரே நேரத்தில் எழுதுவார்கள் .
இதில் மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய நான்கு முக்கியப் பாடங்களும், தேசிய வகை பள்ளிகளுக்கான (SJK) சீன மொழி அல்லது தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளன என கல்வி அமைச்சின் தேர்வு வாரிய இயக்குநர் அப் அஜிஸ் மாமத் தெரிவித்தார்.
"ஒவ்வொரு பாடமும் 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு எழுத்துப்பூர்வமாக சோதிக்கப்படும். அதே வேளையில், முதன்மை நீரோட்டக் கல்வியில் உள்ள சிறப்புக் கல்வித் தேவைப்படும் மாணவர்களுக்குப் பதிலளிக்க 30 முதல் 60 நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் வழங்கப்படும்," என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
அனைத்து நான்காம் ஆண்டு மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதப் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்கும், எந்தவொரு மாணவரும் விடுபடாதவாறு போதுமான கேள்வித் தாள்களைத் தயார் செய்வதற்கும் பள்ளிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று அப் அஜிஸ் கூறினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான மதிப்பீட்டுத் தரத்தை உறுதி செய்வதற்காக, தேர்வு வாரியம் வகுப்பறை கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் இணைந்து இத்தேர்வுக்கான கேள்வித் தாள்களை உருவாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கேள்வித் தாள்கள் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான கற்றல் உள்ளடக்கங்களை உள்ளடக்கிய 'பாடத்திட்ட மற்றும் மதிப்பீட்டுத் தர ஆவணத்தின்' (DSKP) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
அறிவு, பயன்பாடு, சிக்கலைத் தீர்த்தல், பகுத்தறிவு மற்றும் உயர்நிலைச் சிந்தனைத் திறன் (KBAT) ஆகியவற்றை அளவிடும் பல்வேறு கடினத்தன்மை நிலைகளை இத்தேர்வு கொண்டுள்ளது.
இருமொழித் திட்ட (DLP) வகுப்புகளில் உள்ள மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கான கேள்வித் தாள்களை இருமொழிகளில் பெறுவார்கள் என்றும், மற்ற மாணவர்களுக்கு மலாய் மொழியில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என்றும் அப் அஜிஸ் கூறினார்.
தேர்வு வாரியம் வழங்கும் விடைக்குறிப்பின் அடிப்படையில் மாணவர்களின் விடைத்தாள்களை அந்தந்தப் பாட ஆசிரியர்களே திருத்துவார்கள்.



