கோலாலம்பூர்,ஜூலை 7 - நகரும் காரின் சன்ரூஃப் (sunroof) வழியாகத் தலையை வெளியே நீட்டிய இரு சிறுவர்களின் தாய் கைது செய்யப்பட்டார்.
30 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின்னர், அவர் போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டார்.
நான்கு மற்றும் ஆறு வயதுடைய இரு சிறுவர்கள் சன்ரூஃப் வழியாகத் தலையை வெளியே நீட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைப் போலீசார் கண்டறிந்ததாக, காஜாங் போலீஸ் தலைமை உதவி ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் செராஸ், கம்பங் பத்து 10 (Kampung Batu 10) அருகே உள்ள கிராண்ட் சாகா நெடுஞ்சாலையில் (Grand Saga Highway) நடந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக சனிக்கிழமை மாலை 5.28 மணிக்கு போலீஸ் அறிக்கை பெறப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு, சிறார் சட்டம் 2001-இன் பிரிவு 31(1)(a) மற்றும் பிறரின் உயிர் அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் அலட்சியமான செயல்களுக்கானத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 336-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் எப்போதும் போக்குவரத்து சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தங்களது பாதுகாப்பையும் இதர சாலைப் பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக குழந்தைகளுடன் பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று நஸ்ரோன் அறிவுறுத்தினார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், விசாரணைக்கு உதவும் வகையில் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் எஸ். தாரணியை 017-733 1935 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



