ஷா ஆலம்,ஜூலை 3: கடந்த புதன்கிழமை புதிய பதிப்புக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்ட இரண்டு நாட்களில், குடிநுழைவுத் துறையினால் மொத்தம் 5,140 புதிய மலேசிய அனைத்துலக கடப்பிதழ்கள் வெளியிடப்பட்டன.
நாடு முழுவதிலும் உள்ள 14 கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.
புதிய பதிப்பிலான கடப்பிதழ் விண்ணப்பம் கட்டாயமில்லை என்பதையும், உண்மையில் தேவைப்படுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்ட பொதுமக்களின் ஒத்துழைப்பைத் தனது தரப்பு பாராட்டுவதாக அவர் கூறினார்.
பழைய பதிப்பு கடப்பிதழை வைத்திருப்பவர்கள் அவசரமாக மாற்றத் தேவையில்லை, ஏனெனில் தற்போதுள்ள ஆவணங்கள் காலாவதி தேதிக்கு ஆறு மாதங்கள் முன்பு வரை இன்னும் செல்லுபடியாகும் என்றும் அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை, குடிநுழைவுத் துறை 94 பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய பதிப்பிலான மலேசிய அனைத்துலக கடப்பிதழை அறிமுகப்படுத்தியது.



