கோலாலம்பூர்,ஜூலை 3 - டாக்சியைப் புதுப்பிக்கும் மடானி திட்டத்தின் கீழ் இனி டாக்சி அதன் ஓட்டுநருக்கு நிரந்தர சொந்தமாகும். இனிமேல் அவர்கள் பழைய குத்தகை முறைக்கு கட்டுப்பட்டிருக்க மாட்டார்கள். அம்முறை நீக்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
நிதி கழகங்களுக்கு தவணையைச் செலுத்த வேண்டியிருந்தாலும், புதிதாக டாக்சியைப் பெறும் உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்களுக்கு அக்கார் நிரந்தர சொந்தமாகுமென அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
மெர்டேக்கா சதுக்கத்தில் பிரதமர் தொடக்கி வைத்த டெக்சியைப் புதுப்பிக்கும் தேசிய மடானி திட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக அந்த திட்டத்தின் கீழ், புரோட்டோன் S70 செடான் ரகக் கார் அதிகாரப்பூர்வ டாக்சி மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிய டாக்சியின் அடையாளம் இனி நவீனமாக இருக்கும். கார் கூரையின் மேல் வழக்கமாக இருந்த அடையாளக் குறி இனி இருக்காது. மேலும், புதிய டெக்சி கார்களின் பதிவு எண் 'GET' என்ற எழுத்திலிருந்து தொடங்கும்.
காருக்குள் இலக்கவியல் விளம்பர திரை பொருத்தப்படுவதோடு, e-hailing பதிவு முறையும் இணைக்கப்படுமென அமைச்சர் கூறினார்.



