கோலாலம்பூர், ஜூன் 30 - ஜூலை முதலாம் தேதி தொடங்கி நாட்டிலுள்ள வர்த்தக வாகன ஓட்டுநர்கள் தங்களது தொழில்முறை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் போது, அரசாங்க உதவித் தொகைப் பெற்ற மருத்துவ பரிசோதனைக்குத் தகுதிப் பெறுவர்.
தற்போதைக்கு அந்த மருத்துவப் பரிசோதனைக்கு ஓட்டுநர்கள் 85 ரிங்கிட்டை செலுத்துகின்றனர்.
இனி,புதிய "ஓட்டுநர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" ( Pemandu Sihat dan Selamat ) முயற்சியின் கீழ், ஓட்டுநர்கள் 30 ரிங்கிட்டை மட்டுமே செலுத்துவார்கள். எஞ்சிய 55 ரிங்கிட் தொகையை சொக்சோ-சமூக பாதுகாப்பு அமைப்பின் மூலம் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.
இன்று அரசாங்கத்தின் இந்தப் புதிய முயற்சியை அறிவித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இம்முயற்சியின் கீழ் 40-லிருந்து 59 வயதுக்கு உட்பட்ட 30,000 ஓட்டுநர்கள் பயனடைவார்கள் எனக் கூறினார்.
இந்த முயற்சியின் தொடக்கத்தில் 500 கிளினிக்குகள் பங்குபெறுமென்றாரவர்.
இந்த முயற்சி 2026 வரவு செலவுத் திட்டத் தாக்கலின்போது அறிவிக்கப்பட்டது.



