கோலாலம்பூர், ஜூன் 30 - 94 பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய புதிய அனைத்துலக மலேசிய கடப்பிதழை இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த அறிமுக நிகழ்ச்சி, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த புதிய அனைத்துலக மலேசிய கடப்பிதழுக்கு, 18 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் ஜூலை முதலாம் தேதி தொடங்கி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்பவர்களின் பயணத் தேவைக்கு ஏற்ப ஐந்திலிருந்து 10 ஆண்டுகள் கால கட்டத்துக்கு இந்த பயண கடப்பிதழை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதன் வழி, குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் கடப்பிதழைப் புதுப்பிக்கும் அவசியத்தைக் குறைத்து, மலேசியர்களின் சுமூகமான பயணத்தை உறுதி செய்ய முடியுமென உள்துறை அமைச்சு தெரிவித்தது.
10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடப்பிதழை விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 350 ரிங்கிட்டாகும்.
5 ஆண்டுகளுக்கான கட்டணம் 200 ரிங்கிட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் வழி 10 ஆண்டுகளுக்கான கடப்பிதழை விண்ணப்பிப்பவர்கள் 50 ரிங்கிட் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.
இவ்வேளையில், மலேசிய கடப்பிதழை வைத்திருப்பவர்கள் அதன் செல்லுபடியாகும் காலம் இன்னும் இருக்கும் பட்சத்தில், புதிய கடப்பிதழக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.




