ஜோர்ஜ்டவுன்,ஜூன் 26- கடந்த வாரம் ஜெலுத்தோங்கில் கூட்டமாகத் திரண்டு ஆடவர் ஒருவருக்கு கடுமையான காயங்களை விளைவித்ததாக, ஜோர்ஜ்டவுன் செஷன் நீதிமன்றத்தில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை நால்வர் மறுத்து விசாரணை கோரினர்.
34 வயது ஆர்.நவீன், 31 வயது எஸ் லோககுமாரன், 38 வயது எம்.சஞ்சித் குமார், 30 வயது தினேஸ்குமார் ஆகியோர், நீதிபதி இர்வான் சுஹாய்ன்பொன் முன்னிலையில் தங்களது குற்றச்சாட்டினை மறுத்தனர்.
அவர்கள் அனைவரும், கடந்த ஜூன் 21-ஆம் தேதி காலை மணி 4.25க்கு ஜெலுத்தோங்கிலுள்ள ஹியான் செங் கோங் ஆலயத்தில் 31 வயது முஹம்மட் உமார் ஷெரிஃப் என்பவருக்கு கடும் காயங்களை விளைவித்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை, பிரம்படி, அபராதம் ஆகியவற்றை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் செக்க்ஷன் 149வது பிரிவின் கீழ் அந்த நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு அல்லது சாட்சியாளருக்கு இடையூறு ஏற்படுத்தல் அல்லது தலைமறைவாகலாம் எனும் சாத்தியங்கள் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் உத்தரவாதத்தில் விடுவிக்க நீதிபதி மறுத்தார்.
இந்த வழக்கின் விசாரணை அடுத்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கைபேசியைத் திருடியதாக ஏற்பட்ட தகராறு காரணமாக கேளிக்கை மையமொன்றில் ஆடவர் கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், அக்கும்பல் சம்பந்தப்பட்ட நபரை ஆலயம் வரை பின்தொடர்ந்து பாராங்கத்தியால் தாக்கியதாக போலீஸ் அதன் விசாரணையில் குறிப்பிட்டுள்ளது.



