கோலாலம்பூர், ஜூன் 26 - இன்று அதிகாலையில் ஜோகூர், கோத்தா திங்கியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான புரோட்டோன் சாகா காரில் இருந்த ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக கோத்தா திங்கி போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
அந்த விபத்து அதிகாலை மணி 2.45க்கு கோத்தா திங்கி- குளுவாங் (ஜாலான் துன் ஹபாப்) சாலையின் 5.1- வது கிலோமீட்டரில் நிகழ்ந்ததாகவும், அவ்விபத்து ஒரு காரை மட்டுமே உட்படுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தின் போது, மலேசியரான 47 வயதான அந்த ஓட்டுநர் முன் கார் இருக்கையில் அமர்ந்திருந்த 46 வயதுடைய பெண்ணுடன் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நம்பப்படுவதாகவும், அக்காரில் இருந்தப் பெண் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் யூசோஃப் கூறினார்.



