ஷா ஆலம், ஜூன் 19: எதிர்வரும் ஜூன் 27ஆம் தேதி அம்பாங், டத்தோ அஹ்மட் ரசாலி மண்டபத்தில் (Dewan Dato' Ahmad Razali) ஜோப்கேர் சிலாங்கூர் 2026 (JobCare Selangor 2026) வேலைவாய்ப்புச் சந்தை நடைபெறவுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், வேலை தேடுபவர்கள் நேரடியாக வேலை வழங்குநர்களைச் சந்தித்து, காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
மேலும், திறந்த நேர்காணல் (Open Interview), வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல் மற்றும் பொருத்தமான வேலைகளை அடையாளம் காண்பதற்கான தொழில் ஆலோசனை சேவைகளும் வழங்கப்படவுள்ளன.
அதுமட்டுமில்லாமல், அரசு அமைப்புகளின் கண்காட்சி, சுகாதாரப் பரிசோதனை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன. சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (PERKESO) மூலம் 'MYFutureJobs' தளத்தில் பதிவு செய்யும் சேவையும் வழங்கப்படும்.
இந்த வேலைவாய்ப்புச் சந்தையை சிலாங்கூர் மாநில மனிதவள மேம்பாடு, வறுமை ஒழிப்பு, பூர்வக்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இலாகாவும், சமூகப் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஆர்வமுள்ளவர்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை உடன் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.







