அலோர் ஸ்டார்ஸ், ஜூன் 17 - புக்கிட் காயு ஹித்தாம் குடிநுழைவு, சுங்க, பாதுகாப்பு பரிசோதனை வளாகத்தில் ( ICQS) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போலீசார் 14.63 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பூக்களை பறிமுதல் செய்தனர்.
அந்த போதைப் பொருளின் மதிப்பு 11 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டாகும். சோதனையின் போது உள்நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய கோலாலம்பூர் தனியார் உயர் கல்விக்கூட மாணவர் கைது செய்யப்பட்டதாக கெடா போலிஸ் துணைத் தலைவர் படருல்ஹிஷாம் பஹாரூடின் (Baderulhisham Baharudin) தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பூக்கள் அந்த ஆடவரின் குடும்ப காரின் பின் இருக்கையில் கருப்பு பைகளில் மறைத்து வைக்கப்படிருந்தன. இதுபோன்று நான்கு முறை நாட்டிற்குள் போதைப் பொருளைக் கடத்தியிருப்பதாகவும் ஒவ்வொரு முறையும் கடத்தி வருவதற்காக 4,000 ரிங்கிட்டை கூலியாக பெற்றதாகவும் அந்த ஆடவன் விசாரணையில் ஒப்புக் கொண்டான்.
தாய்லாந்து, டனோக் சுற்றுப் பகுதியில் இருந்து பெறப்பட்ட அந்த போதைப் பொருள் கோலாலம்பூர், ஜோகூர் சந்தைகளில் விநியோகிக்கப்படவிருந்தன.
இவ்வேளையில் 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்ட அந்த ஆடவன் கஞ்சா போதைப் பொருளை உட்கொண்டிருந்ததும் தெரிய வந்தது.



