கோலாலம்பூர், ஜூன் 9 – மலேசிய எதிர்க்கட்சிக் கூட்டணியில் அதிரடி திருப்பமாக, இஸ்லாமியக் கட்சியான பாஸ் (PAS), பெர்சத்து (Bersatu) கட்சியுடனான தங்களின் அரசியல் கூட்டுறவை அதிகாரப்பூர்வமாகத் துண்டித்துக் கொள்வதாக நேற்றிரவு அறிவித்துள்ளது.
இவ்விவரம் குறித்துப் பேசிய பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், இரு கட்சிகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் மற்றும் கள நிலவர மதிப்பீடுகளை ஆராய்ந்த பிறகு, நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுவின் (Central Working Committee) சிறப்புக் கூட்டத்தில் இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், 'முஸ்லிம் ஒற்றுமை' என்ற கொள்கையின் அடிப்படையில், கட்சியின் அரசியல் கூட்டுறவு குறித்த கொள்கை, சட்டம் (ஷரியா) மற்றும் பொது நலன் சார்ந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு பாஸ் சூரா கவுன்சில் (PAS Syura Council) கடந்த ஜூன் 2ஆம் தேதி இந்த முடிவை வழிமொழிந்து. அதனை அமல்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த ஜூன் 2ஆம் தேதி பேசிய பாஸ் சூரா கவுன்சிலின் செயலாளர் டத்தோ நிக் முஹம்மட் ஜவாவி சல்லே, பெர்சத்து கட்சிக்குள் நீடித்து வரும் கடுமையான உட்கட்சிப் பூசல்களையும் நெருக்கடிகளையும் பாஸ் கட்சி மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், இத்தகைய சூழல் ஒட்டுமொத்த பெரிகாத்தான் நேஷனல் (Perikatan Nasional) கூட்டணியின் பலத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது நினைவு கூரத்தக்கது.
மலேசிய எதிர்க்கட்சிக் கூட்டணியின் இரு தூண்களாகக் கருதப்பட்ட பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு முக்கியக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வப் பிரிவு, நாட்டின் அரசியலில், குறிப்பாக வரவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் 16ஆவது பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





