திம்பு, ஜூன் 7 – இமயமலைப் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய பௌத்த நாடான பூடான், தனது நாட்டின் மக்கள் தொகை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது குறித்துப் பெருங்கவலை அடைந்துள்ளது.
இதனைத் தடுக்கும் பொருட்டு, தம்பதியினர் அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதை ஊக்குவிப்பதற்காகப் புதிய பண ஊக்கத்தொகைத் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையே இமயமலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பூதானில், ஒட்டுமொத்த மக்கள் தொகையே 8 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் பிறக்கும் ஒவ்வொரு மூன்றாவது மற்றும் அதற்கு அடுத்தடுத்த குழந்தைகளுக்கும், மூன்று வயது ஆகும் வரை மாதம் 10,000 நுல்ட்ரம் (மலேசிய மதிப்பில் தோராயமாக RM425) ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பூதான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றுக்கு முன்பாகப் பிறந்து, இன்னும் மூன்று வயதை அடையாத தகுதியுள்ள மூன்றாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய பூதான் அமைச்சரவைச் செயலாளர் கேசாங் டெக்கி, இரண்டாவது குழந்தைக்குப் பிறகு தம்பதியினர் எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும் இந்த ஊக்கத்தொகை தடையின்றி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அவர்கள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு அல்லது ஏழு குழந்தைகளைக் கூடப் பெற்றெடுக்கலாம் என்று அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களின்படி, பூதானின் ஒட்டுமொத்த ஆண்டுப் பிறப்பு விகிதம் கடந்த 2015ஆம் ஆண்டில் 11,001 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 8,153 ஆக, அதாவது சுமார் 26 விழுக்காடு வரை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதனால் ஒரு பெண்ணிற்கான சராசரி குழந்தை பிறப்பு விகிதமானது, நாட்டின் மக்கள் தொகையைச் சீராக வைத்திருக்கத் தேவையான 2.1 எனும் அளவை விடக் கீழ்நோக்கிச் சரிந்துள்ளது.
இத்தகைய மக்கள் தொகை வீழ்ச்சி, முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் நாட்டின் குடிமக்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்தல் போன்ற போக்குகள், பூதானின் எதிர்காலத் தொழிலாளர் படை, சமூகக் கட்டமைப்புகள் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பூதானில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக, அந்நாட்டு இளைஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. வழக்கமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட, மக்களின் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை முதன்மையாகக் கருதும் 'மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீட்டை' (Gross National Happiness Index) உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாகப் பூதான் அறியப்படுகிறது.
இச்சூழலில், கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் புதிய கொள்கையானது தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நல்வாழ்வு மீதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், நாட்டின் மக்கள் தொகையின் நீண்டகால நிலைத்தன்மையையும் பிரதிபலிக்கிறது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்ற மக்கள் தொகைச் சரிவைச் சந்தித்து வரும் பூதானின் அண்டை மாநிலமான இந்தியாவின் சிக்கிம் மாநிலமும், கடந்த 2023ஆம் ஆண்டில் பெண்களுக்கு ஒரு வருடப் பிரசவக் கால விடுப்பு, ஆண்களுக்கு ஒரு மாதத் தந்தை கால விடுப்பு மற்றும் செயற்கை முறை கருத்தரிப்பு (IVF) செய்துகொள்பவர்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



