மருத்துவ சுற்றுலாவால் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி

6 ஜூன் 2026, 2:45 PM
மருத்துவ சுற்றுலாவால் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி

சுபாங் ஜெயா, ஜூன் 6: சர்வதேச நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் சுகாதாரச் சேவை வழங்குநர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதால், சிலாங்கூரில் உள்ள கிராமப்புறங்கள் மருத்துவச் சுற்றுலாவின் வளர்ச்சியால் பெரும் நன்மையைப் பெறவுள்ளன.

இந்தத் துறையை வலுப் படுத்தும் முயற்சிகள் கோலா சிலாங்கூர், செக்கிஞ்சான் மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டத்தொடங்கியுள்ளன.

பார்வையாளர்கள் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் நல்வாழ்வு அனுபவங்களுடன் மருத்துவ சிகிச்சையையும் இணைத்துக் கொள்வதே இதற்குக் காரணம் என்று டூரிஸம் சிலாங்கூர் தலைமைச் செயல் அதிகாரி சுவா யீ லிங் தெரிவித்தார்."சில மருத்துவ மையங்களும் சிறிய நகரங்களை நோக்கி விரிவடையத் தொடங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, செகிஞ்சான் மற்றும் கோலா சிலாங்கூர் போன்ற சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால், கேபிஜே (KPJ) கடந்த ஆண்டு கேபிஜே கோலா சிலாங்கூரில் திறந்தது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

குறிப்பாக நீண்ட கால சிகிச்சைகள் மற்றும் உடல்நலம் சார்ந்த தங்குதல்களுக்கு, இயற்கைக்கு நெருக்கமான மீட்புச் சூழலை அதிக அளவிலான சர்வதேச நோயாளிகள் தேடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்."

அவர்கள் மிகவும் நிதானமான சூழலில் குணமடைவதிலும் மீண்டு வருவதிலும் கவனம் செலுத்துவதோடு, சிறிய நகரத்தின் அமைதியான சூழலையும் அனுபவிக்க முடியும்," என்றும் அவர் கூறினார்.யீ லிங்கின் கூற்றுப்படி, பல சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் நடத்துபவர்கள் எதிர்காலத் திட்டங்களுக்காக ரவாங் மற்றும் புக்கிட் தக்குன் அருகிலுள்ள பகுதிகள் உட்பட சிலாங்கூரில் உள்ள சிறிய நகரங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர்."அந்தப் பகுதிகளில் நல்வாழ்வு ஸ்பா (spa) மையங்களை உருவாக்குவதற்கான முன் மொழிவுகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்.

இது சிலாங்கூரின் மருத்துவச் சுற்றுலா அமைப்பை மேலும் வலுப்படுத்தும்," என்று அவர் தெரிவித்தார். தற்போது ஊக்குவிக்கப்படும் மருத்துவச் சுற்றுலாப் பொதிகள் (packages) மருத்துவமனைக்குச் செல்வதை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கவில்லை; மாறாக விமானப் பயணங்கள், தங்குமிடம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன என்றார் அவர்.

சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பொதுவாக அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதனால் பார்வையாளர்களின் செலவினங்கள் அதிகரித்து, உள்ளூர் வணிகங்களுக்கு இது நன்மையளிக்கிறது என்று அவர் கூறினார்.

"சாதாரண மருத்துவப் பரிசோதனைகளுக்காக வருபவர்கள், வழக்கமாக நான்கு பகல் மூன்று இரவுகள் அல்லது மூன்று பகல் இரண்டு இரவுகள் தங்குவார்கள்," என்று கூறிய அவர், மருத்துவச் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்தினருடனேயே வருகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சூழ்நிலை தங்கும் விடுதிகள், உணவு மற்றும் பானக் கடைகள், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் மீதான தேவையையும் மறைமுகமாக அதிகரித்துள்ளது. பல வாடகை கார் நிறுவனங்களும் தங்கும் விடுதிகளும் மருத்துவச் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பிட்ட சிறப்புச் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன என்றும் யீ லிங் விளக்கினார்.

"இந்தச் சுற்றுலாப் பிரிவு பெரும்பாலும் நம்பிக்கையையும், வாய்வழிப் பரிந்துரைகளையுமே பெரிதும் நம்பியுள்ளது. நோயாளிகள் குணமடைந்து, மருத்துவர் அல்லது மருத்துவ மையத்தின் மீது நம்பிக்கைக் கொள்ளும் போது, அவர்கள் அதைத் தங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரிந்துரைக்கின்றனர்," என்று அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.