பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6: சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் 'Program Belia On Sungai' (BOS) திட்டத்தின் மூலம் இளைஞர்கள் நதிப் பாதுகாப்பு முகவர்களாகத் தொடர்ந்து வலுப்படுத்தப் படுகின்றனர்.
இந்தத் திட்டம் பங்கேற்பாளர்களுக்கு நதி மாசடைதல் சவால்கள் குறித்து நேரடியாக அறிய வாய்ப்பளிப்பதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளில் பொது மக்களின் தீவிர ஈடு பாட்டை ஊக்குவிப்பதாகவும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
"மாசடைந்துள்ள சில நதிகளின் நிலைமைக்கு அனைவரின் கவனமும் தேவை, இதைச் சில ஏஜென்சிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது. எனவே, சுற்றாடலை எப்போதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதை உறுதி செய்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.
"நதிப் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப் படுவதை உறுதி செய்வதற்காக, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (ADN), உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இது போன்ற திட்டங்களை நாங்கள் தொடர்ந்து விரிவு படுத்துவோம்," என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள கம்போங் செம்பாகா, சுங்கை காயு அரா நீர்த்தேக்கத்தில் நடைபெற்ற 'Belia On Sungai' (BOS) திட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநில சுற்றுச்சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடினும் கலந்து கொண்டார்.நதியைச் சுத்தப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்ததில், பங்கேற்பாளர்கள், குறிப்பாக இளைஞர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை கோபிந்த் பாராட்டினார்.
இளைய தலைமுறையினரின் தீவிர ஈடுபாடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு அதிக விழிப்புணர்வு இருப்பதையும், நதிகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாப்பதில் மாற்றத்தின் முகவர்களாகச் செயல்படத் தயாராக இருப்பதையும் நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்தத் திட்டம் வெறும் நதிகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், இளைய தலைமுறையினருக்கான ஒரு களக் கல்வித் தளமாகவும் அமைகிறது என்று ஜமாலியா கூறினார்.
அவரது கூற்றுப்படி, முதன்முறையாக இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய இத்திட்டம், மூன்று உயர் கல்வி நிறுவனங்களைச் (IPT) சேர்ந்த 100 பங்கேற்பாளர்களை ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்றுள்ளதுடன், நதிப் பாதுகாப்பு முயற்சிகளில் இளைய தலைமுறையினரின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
"இந்தத் திட்டத்தின் மூலம், பங்கேற்பாளர்கள் நேரடியாகக் களத்தில் நதியைப் பராமரிக்கும் அம்சங்களைக் கற்றுக் கொள்ளவும், வெறும் தத்துவார்த்தக் கற்றல் மூலம் பெற முடியாத உண்மையான அனுபவத்தைப் பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது."அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இது போன்ற திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதன் மூலம் பல நதிகள் பாதுகாக்கப்படும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அதிகரிக்கப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
பண்டார் உத்தாமா சிலாங்கூர் இளைஞர் இயக்கத்தினால் (PeBS) ஏற்பாடு செய்யப்பட்ட BOS திட்டமானது, INTI கல்லூரி, UCSI பல்கலைக்கழகம் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி (BAC) ஆகிய மூன்று உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் தொண்டர்களின் ஈடுபாட்டை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
இத்திட்டத்தின் மூலம், நதி மற்றும் நீர்த் தேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கையின் விளைவாக, பங்கேற்பாளர்கள் 528.9 கிலோகிராம் குப்பைகளைச் சேகரித்து சாதனை படைத்துள்ளனர்.




