கருவுறுதல் சிகிச்சைகள் - சிலாங்கூரில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும்

6 ஜூன் 2026, 5:40 AM
கருவுறுதல் சிகிச்சைகள் - சிலாங்கூரில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும்

சுபாங் ஜெயா, ஜூன் 6:  மருத்துவச் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் பெரும் திறன் கொண்ட துறையாக கருவுறுதல் சிகிச்சை அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தகைய சிகிச்சைகள், குறிப்பாக செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) சிகிச்சை, மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று சிலாங்கூர் சுற்றுலாத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் விளக்கினார்.

"ஐவிஎஃப் போன்ற கருவுறுதல் சிகிச்சைகளுக்கு, நோயாளிகள் பலமுறை வருகை தர வேண்டியுள்ளது. அவர்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு இங்கு வந்து தங்கிவிட்டு, மறு மாதமும் மீண்டும் வர வேண்டியிருக்கும். இந்த முழுமையான செயல்முறைக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை கூட ஆகலாம்," என்று அவர் அண்மையில் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

ஐவிஎஃப் சிகிச்சைத் தொகுப்புகளுக்கு அனைத்துலக நோயாளிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், சிலாங்கூரில் உள்ள பல மருத்துவமனைகள் இந்த சிகிச்சையை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆல்ஃபா ஐவிஎஃப் குழுமத்துடன் இணைந்து சிகிச்சை பெற்ற நாட்டின் முன்னணிப் பாடகி டத்தோ ஸ்ரீ சித்தி நுர்ஹாலிசா தாரூடின் மூலம் இந்த சிகிச்சை பிரபலமடைந்த பிறகு, இதற்கு பரவலான கவனம் கிடைத்திருப்பதாக யீ லிங் கூறினார்.

நல்வாழ்வுச் சுற்றுலா

ஓய்வு நேரச் சுற்றுலா மற்றும் நோய் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நல்வாழ்வுத் தொகுப்புகளின் வாயிலாக, சிலாங்கூர் மாநிலம் முதியவர்களையும் தீவிரமான இலக்காகக் கொண்டு செயல்படுவதாக யீ லிங் தெரிவித்தார்.

கண்புரை (Cataract), எலும்பியல் (Orthopaedic) மற்றும் முறையான தொடர் மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படும் முதியவர்களுக்கு பல மருத்துவமனைகள் சிறப்புத் தொகுப்புகளை வழங்குவதாகவும் அவர் விளக்கினார்.

"தனிநபர்கள் ஆரோக்கியமாக இருக்க தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்வதுடன், மருத்துவ அறிக்கைகளைக் கண் காணிப்பதை உள்ளடக்கிய 'சுறுசுறுப்பான முதுமை'யை (Active aging) நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளும் அடங்குவர்," என்று அவர் கூறினார்.

முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், நல்வாழ்வு மற்றும் முதியோர் பராமரிப்பு திட்டங்கள் மீதான ஆர்வம் பெருகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு மறுவாழ்வு மையங்கள் (Rehabilitation centres) மற்றும் உதவி பெறும் வசிப்பிட வசதிகள் ஆகியவற்றுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளது என்றார்.

முதியவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு குறுகிய கால மறுவாழ்வு வசதிகளை வழங்கும் சன்வே சாங்க்சுவரி (Sunway Sanctuary) போன்ற மேம்பாடுகளை இதற்கு உதாரணமாக யீ லிங் சுட்டிக்காட்டினார். "வேலைக்குச் செல்லும் பல தம்பதியினருக்கு, வயதான மற்றும் தனிக் கவனம் தேவைப்படும் தங்களின் பெற்றோரைக் கவனித்துக் கொள்ள பராமரிப்பு ஆதரவு தேவைப் படுவதால், இது வருங்காலத்தில் ஒரு முக்கிய போக்காக மாறும்," என்று அவர் கூறினார்.

மருத்துவச் சுற்றுலாவின் முக்கியக் கூறான 'நோய் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு' குறித்து விளக்கிய அவர், நோய்வாய்ப்பட்ட பிறகு மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்ற மக்களின் மனநிலையை மாற்ற அதிகாரிகளும் சுகாதாரச் சேவை வழங்குநர்களும் முற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்."இந்த பிரச்சாரம் என்பது உடல் நலம் சரியில்லாதபோது மருத்துவரைப் பார்ப்பது மட்டுமல்ல. ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு என்பது ஆரோக்கியத்தைப் பேணுவதை ஒரு தொடர்ச்சியான பழக்கமாக மாற்றுவதாகும்," என்றும் அவர் கூறினார்.

முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சுகாதாரப் பரிசோதனைகள் ஆகியவை தற்போது நல்வாழ்வுச் சுற்றுலாத் தொகுப்புகளின் ஒரு பகுதியாக, குறிப்பாக முதியோர் சுற்றுலாப் பயணிகளிடையே அதிகமாக விளம்பரப்படுத்தப் படுவதாகவும் அவர் விளக்கினார்.

மலேசியாவில் ஒப்பீட்டளவில் மலிவான மருத்துவச் செலவுகள், சிறந்த மருத்துவ நிபுணத்துவம் மற்றும் நோயாளிகளின் நம்பிக்கை ஆகியவை, வட்டார அளவில் போட்டியிடும் மற்ற நாடுகளை விட மலேசியாவிற்கு கூடுதல் பலத்தை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

பல மருத்துவமனைகள் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள், தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடனான சுகாதாரப் பராமரிப்புகளை மேற்கொள்வதால், நவீன தொழில்நுட்பம் மற்றும் மயமாக்லாக்கல் ஆகியவை சிலாங்கூரின் போட்டித் தன்மையை மேலும் வலுப் படுத்துவதாகவும் யீ லிங் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.