நாட்டில் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது - அமைச்சர்

4 ஜூன் 2026, 2:23 AM
நாட்டில் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது - அமைச்சர்

கோலாலம்பூர், ஜூன் 4 – மலேசியாவில் தற்போதைக்கு எரிவாயு விநியோகம் எவ்வித தடையுமின்றி சீராகவும் போதுமான அளவிலும் உள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் டத்தோ சாங் லி காங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மின் உற்பத்திக்குத் தேவையான எரிவாயுவில் பெரும்பகுதி உள்நாட்டு மூலங்களிலிருந்தே பெறப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற ‘கிராபீன் வழி தொழில்துறை புரட்சி’ (Revolutionising Industry with Graphene) என்ற புதிய திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் துறையின் வளர்ச்சியை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான எரிவாயு இருப்பு கவலைப்படக் கூடிய அளவில் இல்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், மலேசியாவின் மின் உற்பத்தியில் 80 விழுக்காடு உள்நாட்டு வளங்களைக்கொண்டே ஆதரிக்கப்படுவதால், நாம் வெளிநாட்டு விநியோகங்களை அதிகம் நம்பியிருக்கவில்லை என்றும், அதனால் பொதுமக்கள் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்துப் பேசிய கேஸ் மலேசியா (Gas Malaysia Bhd) நிறுவனத்தின் தலைவரும் குழுமத் தலைமைச் செயல் அதிகாரியுமான அஸ்லி முகமட், பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனத்திடமிருந்து முதன்மை விநியோகம் பெறப்படுவதால், நாடு தழுவிய அளவில் தங்களின் செயல்பாடுகளில் எவ்வித முடக்கமும் இல்லை என்று கூறினார்.

மலேசியா மத்திய கிழக்கு நாடுகளின் எரிவாயு விநியோகத்தை அதிகமாகச் சார்ந்திருக்கவில்லை என்பதால், நாட்டின் தொழில்துறைக்குத் தேவையான எரிவாயு விநியோகத்தில் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்றும், தங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி எரிவாயுவை வழங்க முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இருப்பினும், தற்போதைய உலகளாவிய சூழலால் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை என்றாலும், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலித் தொடர் போன்ற இதர காரணிகளால் தொழில்துறையில் சில தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் குறிப்பாக, கொரியா மற்றும் சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் உள்ளூர் ரப்பர் தொழில்துறை போன்ற சில துறைகள் இதனால் சவால்களை எதிர்கொண்டு வருவதாக அஸ்லி முகமட் மேலும் விளக்கமளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.