தஞ்சோங் காராங்கில் தீ விபத்து: ஆறு வணிக வளாகங்கள் முற்றிலும் சேதமடைந்தன

3 ஜூன் 2026, 3:34 AM
தஞ்சோங் காராங்கில் தீ விபத்து: ஆறு வணிக வளாகங்கள் முற்றிலும் சேதமடைந்தன
தஞ்சோங் காராங்கில் தீ விபத்து: ஆறு வணிக வளாகங்கள் முற்றிலும் சேதமடைந்தன

ஷா ஆலம், ஜூன் 3: சிலாங்கூர், தஞ்சோங் காராங் ஜாலான் பெசாரில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ஒரு பிரபல நகைக்கடை உட்பட ஆறு வணிக வளாகங்கள் தீக்கிரையாகின.

நேற்று இரவு 11.27 மணியளவில் இந்த விபத்து குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்த அறிக்கையில், தலா 40-க்கு 20 அடி பரப்பளவு கொண்ட ஆறு கடைத்தொகுதிகள் இந்தத் தீ விபத்தில் சிக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் சுமார் 90 விழுக்காடு வரை மிகக் கடுமையான சேதத்திற்குள்ளாகின என்று அவர் விவரித்தார்.

தீக்கிரையான அந்த வணிக வளாகங்களில் இரண்டு மருந்தகங்கள் (Pharmacies), இரண்டு தொலைத்தொடர்பு சாதனக் கடைகள், ஒரு நகைக்கடை மற்றும் ஒரு மினிகடை (Mini-market) ஆகியவை அடங்கும் என்றும் அவர் கூறினார்.

நெருப்பு பரவி கடைகளைச் சூறையாடிய போதிலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும், தீயணைப்பு வீரர்களின் தீவிர போராட்டத்திற்குப் பிறகு இன்று அதிகாலை 3.54 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்தத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் தஞ்சோங் காராங், கோலா சிலாங்கூர், சிகிஞ்சான் மற்றும் வடக்கு கிள்ளான் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 16 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.