கோர விபத்து: 19 வயது கார் ஓட்டுநர் இரண்டு நாட்களுக்குத் தடுத்து வைப்பு (ரிமாண்ட்)

2 ஜூன் 2026, 7:46 AM
கோர விபத்து: 19 வயது கார் ஓட்டுநர் இரண்டு நாட்களுக்குத் தடுத்து வைப்பு (ரிமாண்ட்)

பத்து பகாட், ஜூன் 2: நேற்று இங்குள்ள ஜாலான் ரெங்கம்-சிம்பாங் ரெங்கத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐந்து உயிர்களைப் பலிகொண்ட கோர விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 19 வயது இளைஞர் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் (ரிமாண்ட்).

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42(1) பிரிவின் கீழ் மேல் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, பத்து பகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முஸ்தகிம் சுகர்னோ நாளை வரையிலான இந்தத் தடுத்து வைப்பு உத்தரவை பிறப்பித்தார்.

முன்னதாக, மெர்சிடிஸ் பென்ஸ் ஏ 250 (Mercedes-Benz A250) ரக காரை ஓட்டிச் சென்ற சந்தேக நபர், பழுப்பு நிறத் தடுப்புக் காவல் ஆடையுடன் காலை 10.20 மணியளவில் காவல் துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த மிகக் கொடூரமான விபத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டதை நேற்று காவல் துறை உறுதிப்படுத்தியது.

குளுவாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகம்மட் நோ கூறுகையில், சந்தேக நபர் தனது 22 வயது அண்ணன் ஓட்டிச் சென்ற பிஎம்டபிள்யூ 530 இ (BMW 530e) காருடன் சேர்ந்து தனது காரை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

மதியம் 1.15 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில், பிஎம்டபிள்யூ 530 இ கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசைப் பாதையில் நுழைந்து பெரோடுவா அல்சா, தொயோத்தா  வியோஸ், புரோட்டான் வீரா மற்றும் மற்றொரு மெர்சிடிஸ் பென்ஸ் கார் மீது மோதியதில் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மோசமான மோதலின் விளைவாக, 10 வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, பிஎம்டபிள்யூ 530 இ காரை ஓட்டிச் சென்ற சந்தேக நபரின் அண்ணன், விபத்தில் ஏற்பட்ட பலத்த காயங்களால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்  பட்டுள்ளது.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.