ஷா ஆலம், ஜூன் 2: நியாயமற்ற முறையில் விலை உயர்த்தப் படுவதைக் கண்காணிப்பதற்கும், கொள்ளை லாபம் ஈட்டும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்குமான ‘ஓப்ஸ் கெசான் 6.0’ (Ops Kesan 6.0) அமலாக்கத்தின் முதல் நாளன்று, சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் (KPDN) வியாபாரிகளுக்கு ஒன்பது நோட்டீஸ்களை வழங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் நுகர்வோரின் பல்வேறு அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைக்குப் பிறகே இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் கேபிடிஎன் இயக்குநர் முஹமட் ஹனிஃப் அசாஹரி தெரிவித்தார்.
2011 விலை கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாபத் தடுப்புச் சட்டத்தின் (சட்டம் 723) பிரிவு 21-இன் கீழ் வழங்கப்பட்ட இந்த நோட்டீஸ்கள், சோதிக்கப்பட்ட பொருட்களின் விலை மற்றும் செலவு தொடர்பான விரிவான தகவல்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.
“இந்த நோட்டீஸ்கள் வழங்குவது ஒரு தலையீட்டு நடவடிக்கையாகவும், நியாயமற்ற முறையில் விலைகளை உயர்த்தி வியாபாரிகள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்பதற்கான எச்சரிக்கையாகவும் செயல்படுகிறது,” என்று அவர் தனது முகநூல் (Facebook) பதிவின் மூலம் தெரிவித்தார்.
நேற்று தொடங்கிய ஓப்ஸ் கெசான் 6.0 நடவடிக்கையானது, ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கோம்பாக், காஜாங், சிப்பாங், கோலா சிலாங்கூர் மற்றும் கோல குபு பாரு உள்ளிட்ட அனைத்து சிலாங்கூர் கேபிடிஎன் அலுவலகங்களையும் உள்ளடக்கி, 2026 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
நடவடிக்கையின் முதல் நாளில், சிலாங்கூர் முழுவதிலும் உள்ள பல மாவட்டங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை வர்த்தகக் கடைகளில் 46 வகையான அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன.
கோழி, கோழி முட்டை மற்றும் பிளாஸ்டிக் பொட்டலப் பொருட்களுடன், கடுகு கீரை (sawi), கைலான், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் போன்ற காய்கறிகள் இந்தச் சோதனையின் போது முக்கிய கவனம் செலுத்தப் பட்ட பொருட்களில் அடங்கும்.
அதே வேளையில், பண்டிகைக் காலங்களுக்குப் பிந்தைய மற்றும் பள்ளி விடுமுறை காரணிகளால் சில்லறை வர்த்தகர்கள் அளவிலான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக் காலம் முழுவதும் உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகள், பண்ணையாளர்கள், விவசாயிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் உட்பட முழுமையான வணிகச் சங்கிலியிலும் சோதனைகள் விரிவுபடுத்தப்படும் என்று முஹமட் ஹனிஃப் கூறினார்.
உலகளாவிய விநியோகத்தில் உள்ள நிலையற்ற தன்மை மற்றும் உலக கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் கவலைகளைத் தொடர்ந்து, ஓப்ஸ் கெசான் 6.0 செயல்படுத்தப்பட்டுள்ளது. இவை சந்தையில் உள்ள பொருட்களின் விலை மற்றும் செயல் பாட்டுச் செலவுகளைப் பாதிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன என்று அவர் விளக்கினார்.
சட்டம் 723-இன் கீழ், கொள்ளை லாபத்தில் ஈடுபடும் எந்த ஒரு தரப்பினருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேபிடிஎன் எச்சரித்துள்ளது.
விலைகளை முறைகேடாக உயர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைத் தெரிந்த பொதுமக்கள், வாட்ஸ்அப் (WhatsApp), e-Aduan அகப்பக்கம், 1-800-886-800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது Ez ADU KPDN செயலி ஆகியவற்றின் மூலம் புகார்களை அளிக்கலாம்.
ஓப்ஸ் கெசான் 6.0: 46 வகையான பொருட்களைச் சோதனையிட்ட சிலாங்கூர் கேபிடிஎன், ஒன்பது நோட்டீஸ்களை வழங்கியது
2 ஜூன் 2026, 7:46 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




