ஷா ஆலாம், ஜூன் 2: சான் சௌ லின் (Chan Sow Lin) நிலையத்திற்கு அருகே இலகுரக ரயில் (LRT) தடம்புரண்ட விபத்தையடுத்து, சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் மாற்று ரயில் சேவைகள் மற்றும் இலவச இணைப்புப் பேருந்து சேவைகள் இன்றும் தொடர்கின்றன.
பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காலக்கட்டத்தில் பயணிகளின் பயணம் சீராக இருப்பதை உறுதிசெய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரேபிட் ரயில் (Rapid Rail) நிறுவனம் தெரிவித்துள்ளது.
செந்தூல் தீமோர் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை புடு நிலையத்தில் திரும்பிச் செல்லும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
"அம்பாங் வழித்தடத்தைப் பொறுத்தவரை, நடைமேடை (Platform) 2-ல் அம்பாங் மற்றும் மலூரி இடையே ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கு ஒருமுறை மாற்று ரயில்கள் இயங்கும். அதே வேளையில் மலூரி மற்றும் சான் சௌ லின் இடையே நடைமேடை 1B மற்றும் 2B-ல் ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்று ரயில்கள் இயக்கப்படும்.
"இதற்கிடையில், புத்ரா ஹைட்ஸ் நிலையத்திலிருந்து வரும் ரயில்கள் ஆறு நிமிட இடைவெளியில் பண்டார் தாசேக் செலாத்தான் நிலையத்தில் திரும்பிச் செல்லும்," என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டார் தாசேக் செலாத்தான் மற்றும் செராஸ் இடையே நடைமேடை 1-லும், செராஸ் மற்றும் புடு இடையே நடைமேடை 1-லும் ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்று ரயில் சேவைகள் வழங்கப் படுகின்றன.
"மேலும், தற்போதைய போக்குவரத்து நெரிசலைப் பொறுத்து 15 முதல் 20 நிமிட இடைவெளியில் ஹாங் துவா, செராஸ் மற்றும் பாண்டான் ஜெயா இடையே இலவச இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.
"பயணிகள் எந்தவொரு சிரமத்தையும் தவிர்ப்பதற்கு, தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும், பொருத்தமான மாற்று ரயில் வழித்தடங்களைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று ரேபிட் ரயில் கூறியது.
உதவி தேவைப்படும் பொதுமக்கள், பணியில் உள்ள நிலைய அதிகாரிகள் அல்லது உதவி போலீசாரிடம் (Polis Bantuan) கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று, தண்டவாளத்தை மாற்றும் சுவிட்சில் ஏற்பட்ட பழுதின் காரணமாக சான் சௌ லின் நிலையத்திற்கு அருகே அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தட ரயில் தடம்புரண்டது. இதனால் ரயில் சேவைகளின் அட்டவணை பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தண்டவாளப் பணிகள் முடிவடைந்து, ரயில் சேவைகள் அதிகபட்சமாக வரும் புதன்கிழமைக்குள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சீரமைப்புப் பணிகள் நடைபெறும் காலக் கட்டம் முழுவதும் பயணிகளின் நடமாட்டம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் வகையில், அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிலையங்களும் தொடர்ந்து செயல்படும் என்றும், ஆனால் அதற்கென மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை அட்டவணை பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எல்.ஆர்.டி தடம் புரண்ட விபத்து: மாற்று ரயில் சேவைகள், இலவச இணைப்புப் பேருந்து சேவைகள் தொடரும்
2 ஜூன் 2026, 5:46 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைselangor
உங்கள் கருத்து என்ன?



