கோலாலம்பூர், ஜூன் 2: தேசிய டிராக் சைக்கிளோட்ட ஜாம்பவான் டத்தோ முஹமட் அஜிசுல்ஹஸ்னி அவாங், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களால் 'டர்ஜா பக்தி' (Darjah Bakti) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு இன்று வரலாறு படைத்துள்ளார்.
இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வில் சுல்தான் இப்ராஹிம் இவ்விருதினை வழங்கினார்.
பூப்பந்து ஜாம்பவான் டத்தோஸ்ரீ லீ சோங் வெய் (2021) மற்றும் ஸ்குவாஷ் ராணி டத்தோ நிக்கோல் ஆன் டேவிட் (2024) ஆகியோருக்குப் பிறகு, இந்த உயரிய விருதைப் பெறும் நாட்டின் மூன்றாவது தடகள வீரர் முஹமட் அஜிசுல்ஹஸ்னி ஆவார்.
சைக்கிளோட்ட விளையாட்டை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் மலேசியாவின் நற்பெயரை வலுப்படுத்துவதிலும் அஜிசுல்ஹஸ்னியின் அர்ப்பணிப்பு, சிறப்பு மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புக்கு தேசம் வழங்கும் மிக உயரிய அங்கீகாரமாக இந்த மதிப்புமிக்க விருது அமைந்துள்ளது.
ஜூன் 26, 1975 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'டர்ஜா பக்தி' விருது, பல்வேறு துறைகளில் நாட்டிற்கும் அனைத்துலக அளவிலும் அசாதாரண பங்களிப்புகளை வழங்கிய தனி நபர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கூட்டரசு விருதுகளில் ஒன்றாகும்.
இந்த விருது எந்தவொரு காலகட்டத்திலும் 10 பேருக்கு மட்டுமே வழங்கப்படக் கூடியது, மேலும் இது விருதாளருக்கு எவ்வித சிறப்பு பட்டத்தையும் அளிக்காது.
'த பாக்கெட் ராக்கெட்மேன்' (The Pocket Rocketman) என அழைக்கப்படும் 38 வயதான அஜிசுல்ஹஸ்னி, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான தடகள வீரர்களில் ஒருவராவார். மேலும் அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உலக அரங்கில் மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
திரெங்கானு, டுங்குனில் பிறந்த இவர், ஹாங்காங்கில் நடைபெற்ற 2017 உலக டிராக் சைக்கிளோட்ட சாம்பியன்ஷிப்பில் கீரின் பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். தவிர, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கீரின் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் அதே பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
ஒலிம்பிக் வெற்றியுடன், இந்த டிராக் சைக்கிளோட்ட தாரகை காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் இதர அனைத்துலக போட்டிகளிலும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
கடந்த மே மாத தொடக்கத்தில், ஷிசுவோகாவில் நடைபெற்ற ஜப்பான் டிராக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் டிராக் சைக்கிளோட்ட அரங்கில் தனது ஆதிக்கத்தை அஜிசுல்ஹஸ்னி மீண்டும் நிரூபித்தார்.
அஜிசுல்ஹஸ்னி வரலாறு படைத்தார், 'டர்ஜா பக்தி' விருதைப் பெறும் மூன்றாவது தடகள வீரர்
2 ஜூன் 2026, 2:27 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




