சுபாங் ஜெயாவில் மூன்று வழிபாட்டுத் தலங்களின் வாகன நிறுத்தப் பிரச்சனை ஆகஸ்டில் தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பு

1 ஜூன் 2026, 9:21 AM
சுபாங் ஜெயாவில் மூன்று வழிபாட்டுத் தலங்களின் வாகன நிறுத்தப் பிரச்சனை ஆகஸ்டில் தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பு

ஷா ஆலம், மே 31: சுபாங் ஜெயா, பெர்சியாரான் கெவாஜிப்பானில் உள்ள மூன்று முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் வாகன நிறுத்துமிட பற்றாக்குறை பிரச்சினை, இந்த ஆகஸ்ட் மாதம் 4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வாகன நிறுத்த வசதித் திட்டம் நிறைவடையும் போது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டமிட்டபடி நடைபெற்று வரும் இத்திட்டம், வருகையாளர்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக 90 முறையான வாகன நிறுத்தங்களை வழங்கும் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிச்செல் எங் மெய் ஸீ தெரிவித்தார்.

இந்த வசதி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம், குருத்வாரா சாஹிப் சுபாங் மற்றும் சுபாங் ஜெயா பௌத்த சங்கம் (SJBA) ஆகியவற்றிற்குப் பெரிதும் பயனளிக்கும். இந்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளூர் சமூகம் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதிலும் உள்ள பக்தர்களின் முக்கிய மையங்களாக விளங்குகின்றன.

"புரட்டாசி, வைசாகி மற்றும் விசாக
தினம் போன்ற முக்கிய பண்டிகைகளின் போதும் அல்லது பெரிய அளவிலான சமூக நிகழ்வுகள் நடைபெறும் போது, ஆயிரக்கணக்கான வருகையாளர்கள் வருவதால் போக்குவரத்து நெரிசலும், வாகனங்களை நிறுத்துவதில் கடுமையான சிரமமும் ஏற்படுகிறது.

"சில சூழ்நிலைகளில், பல பண்டிகைகள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இப்பகுதிக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மூன்று வழிபாட்டுத் தலங்களும் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான வாகன நிறுத்தப் பிரச்சினை குறித்துத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டிலேயே இதற்கான தீர்வைத் தேடும் முயற்சிகள் தொடங்கப்பட்டதாக மிச்செல் கூறினார்.

முன்னதாக, பெரிய நிகழ்வுகள் நடைபெறும் போது, அருகில் உள்ள காலி நிலத்தைத் தற்காலிக வாகன நிறுத்தமாகப் பயன்படுத்த சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும், சுபாங் ஜெயா மாநகராட்சியும் (MBSJ) அனுமதி அளித்திருந்தன.

இருப்பினும், அந்த நிலப்பகுதி மேடு பள்ளமாக இருந்ததால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்குச் சிரமமாக அமைந்ததால் அந்த நடவடிக்கை முழுமையான பலனை அளிக்கவில்லை.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில் சன்வே நிறுவனம் தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை அறிவித்தது. இந்த நிதியைக் கொண்டு அந்த மூன்று வழிபாட்டுத் தலங்களுக்குப் பின்னால் உள்ள சாலை ஒதுக்கீட்டு நிலத்தில் நிரந்தர வாகன நிறுத்த வசதி கட்டப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

"இந்தத் திட்டம் நிறைவடைந்ததும், இது ஒரு முறையான வாகன நிறுத்தத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பயனர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதற்காகச் சிறந்த விளக்குகள் மற்றும் வடிகால் அமைப்புகளையும் கொண்டிருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் புதிய படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாய்வுப் பாதை (ramp) அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும் இத்திட்டத்தில் அடங்கும் என மிச்செல் மேலும் கூறினார்.

இத்திட்டம் திட்டமிட்டபடி நிறைவடைந்து உள்ளூர் சமூகத்திற்குப் பயனளிப்பதை உறுதி செய்வதற்காக, சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் சுபாங் ஜெயா மாநகராட்சியும் இத்திட்டத்தின் செயல்
பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.mediaselangor.com/ms/2026/05/377108

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.