கோலாலம்பூர், ஜூன் 1: முன்பு கண்காட்சிக்கு வருபவர்கள் புத்தகங்களை வாங்கிக்கொண்டு பைகள் நிறையத் திரும்புவார்கள். ஆனால் இப்போது பலரும் பல்வேறு பதிப்பகங்களின் அரங்கங்களில் பிரத்யேக முத்திரைகளைத் (stamp) தேடிச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் புதிய வழக்கம், 2026 கோலாலம்பூர் சர்வதேசபுத்தகக் கண்காட்சியை (PBAKL) மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. கண்காட்சி நடைபெறும் வேளையில் கூடுதல் அரங்குகளைப் பார்வையிடவும் இது அவர்களைத் தூண்டுகிறது.
புத்தகங்களை வாங்கும் அனுபவத்தை மேலும் அர்த்தமுள்ளதாகவும் தனித்துவமானதாகவும் மாற்றும் நோக்கில், இன்ஸ்டிடியூட் புக்கு டாருல் ஏசான் (IBDE) போன்ற பதிப்பகங்கள் இந்த முன்முயற்சியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.
முத்திரைகளைச் சேகரிக்கும் நடவடிக்கை புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களிடையே, குறிப்பாகப் புதிய தலைமுறையினரிடம், பிரபலமாகி வருவதாக IBDE-இன் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவின் மூத்த மேலாளர் ஐனுல் முஅய்யானா தெரிவித்தார்.
"இம்முறை புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களின் புதிய பொழுதுபோக்காக மாறியுள்ள முத்திரை சேகரிக்கும் வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம்.
"IBDE-இன் வாசகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு முத்திரைகளைச் சேகரிக்கும் வாய்ப்பை அளிக்கிறோம். ஒரு புத்தகத்தை வாங்குவது என்பது இனி வெறுமனே அதை அலமாரியில் வைப்பதாக மட்டும் இருக்காது.
"அவர்கள் முத்திரைகளைச் சேகரிக்கலாம், குறிப்புகளை எழுதலாம் (journaling), மற்றும் புத்தகக் கண்காட்சியில் தங்களின் அனுபவங்களை பதிவு செய்து கொள்ளலாம்," என்று கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) நடைபெற்ற PBAKL 2026 கண்காட்சியில் சந்தித்தபோது அவர் கூறினார்.
தற்போதைய வாசகர்கள் ஊடாடும் (interactive) கூறுகளையும், தனிப்பட்ட அனுபவங்களையும் பெரிதும் மதிக்கும் வாசிப்புப் போக்குகளுக்கு ஏற்ப இந்த அணுகுமுறை அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
"புத்தகங்கள் படிப்பதற்காக மட்டுமின்றி, மலேசிய வாசகர்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவும் மாறலாம்," என்று அவர் மேலும் கூறினார்.
PBAKL 2026 கண்காட்சியில் மேற்கொள்ளப்பட்ட பார்வையில், பல பதிப்பகங்கள் தங்கள் அரங்கங்களில் பிரத்யேக முத்திரைகளை வைத்துள்ளதைக் காண முடிந்தது. இது பார்வையாளர்கள் தங்களின் முத்திரை சேகரிப்பை முழுமையாக்க மேலும் பல அரங்குகளை நோக்கிச் செல்ல உந்துதலாக அமைந்தது.
அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய முத்திரை சேகரிப்பாளர்களின் சமூகங்கள் இந்த நடவடிக்கைக்குக் காட்டும் ஆர்வம், புத்தகக் கண்காட்சியில் இது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இது வெறும் நினைவலைகளைச் சேகரிப்பதைத் தாண்டி, வாசிப்பு கலாச்சாரத்தை மிகவும் எளிமையானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் மாற்றுகிறது.
மே 29 முதல் ஜூன் 7 வரை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) நடைபெறும் PBAKL 2026 கண்காட்சியில், 198 கண்காட்சி நிறுவனங்கள் 1,210 அரங்குகளுடன் பங்கேற்றுள்ளன.
43-வது ஆண்டாக நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை ஒன்றிணைக்கும் முக்கியத் தளமாகத் தொடர்ந்து திகழ்கிறது.




