லிண்டுங் 24 மணிநேரத் திட்டம் இன்று முதல் அமல்; ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பயன்பெறுவர்

1 ஜூன் 2026, 2:44 AM
லிண்டுங் 24 மணிநேரத் திட்டம் இன்று முதல் அமல்; ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பயன்பெறுவர்

கோலாலம்பூர், ஜூன் 1: 1969ஆம் ஆண்டின் பணியாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ் உள்ள ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள், பணி தொடர்புல்லாத விபத்துகளிலிருந்து இன்று முதல் தானாகவே முழுமையான பாதுகாப்பைப் பெறுவர்.

1969
ஆம் ஆண்டின் பணியாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட லிண்டுங் 24 மணிநேரத் திட்டம் (LINDUNG 24 Jam), பொது விடுமுறை நாட்கள் உட்பட மலேசியாவில் மிகவும் விரிவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வழங்குகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

"சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (PERKESO) கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டம், தற்போதைய அனைத்து முறைசார் தொழிலாளர்களுக்கும் தானாகவே பொருந்தும். இதற்காக முதலாளிகளோ அல்லது தொழிலாளர்களோ புதிதாக எந்தப் பதிவும் செய்ய வேண்டியதில்லை.

"ஜூன் 1, 2026-க்குப் பிறகு புதிதாக வேலையில் சேருபவர்களை, தற்போதைய நடைமுறைகபடி முதலாளிகள் பெர்கேசோ (Perkeso) அமைப்பின் மூலம் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

லிண்டுங் 24 மணிநேரத் திட்டத்திற்கான சந்தாத் தொகையை முழுமையாகத் தொழிலாளர்களே ஏற்பர் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டங்களின்
படி இது படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும் ரமணன் கூறினார். இச்சந்தா செலுத்துவதற்கான உச்சவரம்பு சம்பளம் ரிங்கிட் 6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்டமாக, இத்திட்டத்திற்கான சந்தா விகிதம் மாதாந்திர சம்பளத்தில் 0.75 சதவீதமாக இருக்கும். எனவே, தொழிலாளர்களின் சம்பளத்தில் இத்தொகையைப் பிடித்து, பெர்கேசோவுக்கு மாதந்தோறும் செலுத்துவது முதலாளிகளின் பொறுப்பாகும் என்று அமைச்சர் விளக்கினார்.

தடையற்ற பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இதனை எளிதாகப் பின்பற்றுவதற்கும் சந்தா செலுத்தும் நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

"லிண்டுங் 24 மணிநேரத் திட்டத்தின் மூலம், சந்தாதாரர்களின் நல்வாழ்வுக்காக பெர்கேசோ எட்டு வகையான காப்பீடுகளை வழங்குகிறது. மருத்துவ உதவி, தற்காலிக இயலாமை
உதவி , நிரந்தர இயலாமை உதவி மற்றும் சார்ந்திருப்போர் உதவி திட்டங்களை கொண்டுள்ளது.

"மேலும், தொடர் கவனிப்புப் படி, ஈமச்சடங்கு உதவி, உடல் மற்றும் தொழில்முறை மறுவாழ்வு உதவி அல்லது பணிக்குத் திரும்புதல் (Return To Work) திட்டம், மற்றும் வாரிசுகளின் எதிர்காலத்தை ஆதரிக்கும் வகையிலான கல்வி நன்மை ஆகியவையும் வழங்கப்படுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதில், இந்த விரிவான பாதுகாப்புத் திட்டம் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பின் (ILO) பரிந்துரைகளுக்கும், அனைத்துலகச் சிறந்த நடைமுறைகளுக்கும் ஏற்ப அமைந்துள்ளதாக ரமணன் விவரித்தார்.

பெர்கேசோ முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சி, மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை தற்போதைய தொழிலாளர் சந்தைக்கு ஏற்ப மிகவும் முழுமையானதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் மாற்றியுள்ளது. அத்துடன், நாட்டின் தொழிலாளர் படையின் நல்வாழ்வையும் நலனையும் உறுதி செய்வதில் 'மலேசியா மடாணி' (Malaysia MADANI) தொலைநோக்கிற்கும் இது ஆதரவளிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த நன்மைகளுக்கான எந்தவொரு விண்ணப்பத்தையும்
https://lindungfaedah.perkeso.gov.my/ என்ற இணைப்பின் மூலம் 'LINDUNG Faedah' அகப்பக்கத்தில் அகலவரி (online) வாயிலாகவோ அல்லது அருகிலுள்ள பெர்கேசோ அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றோ சமர்ப்பிக்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.