கோலாலம்பூர், மே 31: 2026-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சிக்கு (PBAKL)வருகையாளர்களிடையே கிடைத்துள்ள அமோக வரவேற்பின் மூலம், அச்சுப் புத்தகங்கள் மீதான மக்களின் ஆர்வம் இன்னும் வலுவாகவே இருப்பது தெரிகிறது.
டிஜிட்டல் தளங்கள் மற்றும் மின்னணுச் சாதனங்களின் பயன்பாடு பரவலாக அதிகரித்து வரும் நிலையிலும், புத்தகப் பதிப்புத் துறை தொடர்ந்து தனக்கான பொருத்தமான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையை இந்தச் சூழல் ஏற்படுத்தியுள்ளது.
பிளிங்க் புக் (Blink Book) சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சய்சுல் அமல் சுல்கிப்லி (51) கூறுகையில், நீண்ட விடுமுறையை முன்னிட்டு இம்முறை புத்தகக் கண்காட்சிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் திரளாக வந்துள்ளது மிகுந்த ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் பெற்றோர்கள் காட்டும் ஈடுபாடு இதில் தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டார்.
"பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்கள் அமர்ந்திருக்க நாங்கள் சிறப்பு இடவசதியை ஏற்படுத்தியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான வாசிப்புப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் அளிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
"மின்னணுச் சாதனங்களின் பயன்பாட்டால் புத்தகத் துறை சவால்களை எதிர்கொண்டாலும், அச்சுப் புத்தகங்களை வாசிப்பதன் அனுபவத்தை இன்னும் பலர் மதிக்கிறார்கள் என்பதை என்னால் காண முடிகிறது," என்றார் அவர்.
பதிப்புத் துறையில் நிலவும் போட்டி, தரமான மற்றும் புதுமையான படைப்புகளை உருவாக்குவதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
"கடந்த ஆண்டு இக்கண்காட்சியை முன்னிட்டு 126 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டோம், ஆனால் இந்த ஆண்டு அது 200 ஆக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டுள்-ளோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, இமான் (IMAN) நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் நூருல் நஜ்வா அஹ்மத் ரம்சான் (30) கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து-ள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகள் உட்பட நாவல்கள் மற்றும் புனைகதைகளுக்கு வாசகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
"வருகையாளர்களில் குடும்பத்தினர் மற்றும் 'ஜென் இசட்' (Gen Z) எனப்படும் இளைய தலைமுறையினரும் அடங்குவர். வாசிப்பில் ஆர்வம் காட்டும் மற்றும் பல்வேறு வகையான வாசிப்புப் பொருட்களைத் தேடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்.
"விலைப் போட்டி முக்கிய சவாலாக இருந்தாலும், அச்சுப் புத்தகங்களுக்கான தேவை இன்னும் வலுவாகவே உள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்றார் அவர்.
இந்த ஆண்டு சுமார் 30 புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு வெளியீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மெங்கோஸ்டீன் புக்ஸ் (Mangosteen Books) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹனாஃபி முன்ஷி (36) கூறுகையில், தங்கள் விற்பனையகத்தில் அதிகரித்துள்ள விற்பனை மற்றும் வருகையாளர்களின் எண்ணிக்கை, உள்ளூர் புத்தகத் துறையின் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
கண்காட்சி முழுவதும் வரலாற்றுப் புனைகதை நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற வகைகளில் ஒன்றாகத் திகழ்வதாகவும் அவர் கூறினார்.
"எங்கள் விற்பனையகத்திற்கு வந்தவர்களில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகம். சுவாரஸ்யமாக, அவர்கள் கழிவு விலையை மட்டும் தேடாமல், தரமான உள்ளடக்கத்தைக் கொண்ட புத்தகங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
"இளைய வயதினரிடையே வாசிப்பு விகிதம் அதிகரித்து வருவதை நான் காண்கிறேன். இது பதிப்புத் துறைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்," என்றார் அவர்.
எனவே, எதிர்காலத்தில் அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் ஏற்ற மேலும் பல படைப்புகள் வெளியிடப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே கருத்தை எதிரொலித்த KKRI சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் பதிவுபெற்ற ஆலோசகர் நூருல் ஃபத்தேகா வாய் மாஃபுடின், பெற்றோர் வளர்ப்பு, தகவல் தொடர்பு மற்றும் ஆய்வுகள் தொடர்பான புத்தகங்களுக்கு வருகையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறினார்.
பெரும்பாலான வாங்குபவர்கள், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பும் பெற்றோர்களே என்று அவர் குறிப்பிட்டார்.
"தற்போதைய முக்கிய சவால் மின்-புத்தகங்கள் (e-books) மற்றும் இணைய வாசிப்புத் தளங்களுக்கான தேவை அதிகரிப்பதாகும். ஆயினும், இளைஞர்களிடையே வாசிப்பு ஆர்வம் இன்னும் நல்ல நிலையில் இருப்பதோடு, அது மேலும் மேம்பட்டு வருவதையும் காண முடிகிறது," என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) நடைபெறும் 2026-ஆம் ஆண்டுக்கான PBAKL, மக்களிடையே வாசிப்புப் பண்பாட்டை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய படைப்புகளை விளம்பரப்படுத்த பதிப்பாளர்களுக்கு ஒரு முக்கியத் தளமாகவும் தொடர்ந்து திகழ்கிறது.
மே 29 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் இந்த வருடாந்திர நிகழ்வு, சமூகத்தில் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் புத்தக வெளியீடுகள், எழுத்தாளர்களைச் சந்திக்கும் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விற்பனை என பல்வேறு நடவடிக்கைகளை வழங்குகிறது.
டிஜிட்டல் சகாப்தத்திலும் அச்சுப் புத்தகத் துறை வலுவாக இருக்கும்: பதிப்பாளர்கள் நம்பிக்கை
1 ஜூன் 2026, 2:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



