இரண்டு வயது சிறுவன் கொலை வழக்கு: தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

29 மே 2026, 8:19 AM
இரண்டு வயது சிறுவன் கொலை வழக்கு: தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

தெமர்லோ, மே 29: கடந்த மே 11-ஆம் தேதி இரண்டு வயது சிறுவன் ஒருவனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், குற்றம் சாட்டப்பட்ட 29 வயதான முகமது இக்பால் ஃபித்ரி மஸ்லான் என்பவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

மஜிஸ்திரேட் அனிஸ் அத்லினா அபு ஜோஹான் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு வாசித்துக்காட்டப்பட்டது. அந்நபர் கடந்த மே 11-ஆம் தேதி காலை 9 மணியளவில், தாமான் செபெராங் தெமர்லோவில் உள்ள ஒரு வீட்டில் முகமது ஹைடர் அப்துல் முக்மின் என்ற சிறுவனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டப் பிரிவு 302-இன் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன், மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் 12 பிரம்படிகள் குறையாத தண்டனையும் விதிக்கப்பட இச்சட்டம் வழிவகுக்கிறது.

இவ்வழக்கின் அரசுத் தரப்பு விசாரணையைத் துணை அரசு வழக்கறிஞர் அத்ரியானா அஸ்ரின் வழிநடத்திய வேளையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தரப்பில் வழக்கறிஞர் எவரும் முன்னிலையாகவில்லை.

இதனைத் தொடர்ந்து, மஜிஸ்திரேட் இந்த வழக்கின் மறுபரிசீலனைக்காக எதிர்வரும் செப்டம்பர் 1-ஆம் தேதியை நிர்ணயித்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கவும் மறுத்துவிட்டார்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட அச்சிறுவன் கடந்த மே 13-ஆம் தேதி சுயநினைவற்ற நிலையில் தெமர்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் ஆரம்பத்தில் குழந்தை வதை வழக்காகவே காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டது.

இருப்பினும், உடற்கூறாய்வு முடிவில் அச்சிறுவன் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் அதிர்ச்சியின் காரணமாகவே உயிரிழந்தான் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விசாரணை தண்டனைச் சட்டப் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.