மலேசிய ஊடக மன்றம்: நெறிமுறைகளின் அரணாகவும் டிஜிட்டல் சவால்களை எதிர்கொள்ளும் தளமாகவும் விளங்குகிறது

29 மே 2026, 7:56 AM
மலேசிய ஊடக மன்றம்: நெறிமுறைகளின் அரணாகவும் டிஜிட்டல் சவால்களை எதிர்கொள்ளும் தளமாகவும் விளங்குகிறது

கோலாலம்பூர், மே 29: ஊடக நெறிமுறைகள், ஊடக சுதந்திரம் மற்றும் டிஜிட்டல் சகாப்தத்தின் சவால்களைக் கையாள்வதற்கான ஒரு புதிய முறையாக 2025 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மலேசிய ஊடக மன்றம் (MMM), நாட்டின் ஊடகத் துறையில் சுய ஒழுங்குமுறையை வலுப்படுத்தும் முக்கியத் தளமாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக சமூக ஊடகங்களின் அழுத்தங்கள் மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் தாக்கங்களுக்கு ஊடகங்கள் உள்ளாகும் இக்காலக்கட்டத்தில், ஊடகங்கள் தொடர்பான பிரச்சனைகளை மிகவும் நியாயமான, தொழில்முறை மற்றும் சுதந்திரமான முறையில் கையாள இத்தகைய மன்றம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என மலேசிய ஊடக மன்றத்தின் செயலாளர் ரட்ஸி ரசாக் தெரிவித்தார்.

இதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட, சுதந்திரமான மற்றும் முறையான கட்டமைப்புடன் கூடிய ஊடக மன்றம் இல்லாத காரணத்தால், ஊடகங்கள் மீதான புகார்கள், பத்திரிகைத் தரத்தை நிர்ணயித்தல் மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஒரே தொழில்முறை கட்டமைப்பின் கீழ் முழுமையாகக் கையாள்வதில் சிரமம் நிலவியதாக அவர் குறிப்பிட்டார்.

"செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் இடையூறுகள், டாக்ஸிங் (doxxing - தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுதல்), பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைதல் போன்ற புதிய சவால்களை ஊடகத்துறை எதிர்கொண்டுள்ள நிலையில், மலேசிய ஊடக மன்றத்தின் தேவை தற்போது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது," என்று தேசிய செய்தியாளர் தினத்தை (ஹவானா) முன்னிட்டு பெர்னாமாவிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

2025-ஆம் ஆண்டு மலேசிய ஊடக மன்றச் சட்டத்தின் (சட்டம் 868) கீழ் இயங்கும்
இம்மன்றத்தின் முக்கிய நோக்கம், அரசாங்கத்தின் அமலாக்க நிறுவனமாகச் செயல்படுவது அல்ல; மாறாக, ஊடகத் துறைக்கான சுய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதே ஆகும் என்றார் அவர்.

பத்திரிகை நெறிமுறைத் தரங்களை நிர்ணயித்தல், நடத்தை விதிகளை வழங்குதல், புகார்களைக் கையாளுதல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவை மலேசிய ஊடக மன்றத்தின் முக்கிய பணிகளில் அடங்கும் என ரட்ஸி தெரிவித்தார்.

எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினரின் ஏகபோக உரிமையும் இன்றி, ஊடக நிறுவனங்கள், ஊடகச் சங்கங்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சாராத உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு சமநிலையான கட்டமைப்பில் முடிவுகளை எடுக்கும் வகையில் இம்மன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14, 2025 முதல் இந்த மன்றம் நடைமுறைக்கு வந்தபோதிலும், இதன் உண்மையான செயல்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்னும் சில குழப்பங்கள் நிலவுவதை அவர் ஒப்புக்கொண்டார்.

"சிலர் மலேசிய ஊடக மன்றத்தை ஓர் அரசு சாரா அமைப்பாகப் (NGO) பார்க்கிறார்கள், சிலர் இதனை ஓர் அரசாங்க நிறுவனமாகக் கருதுகின்றனர், மேலும் சிலர் இம்மன்றம் நேரடியாக எந்தவொரு ஊடக நிறுவனத்தையும் தண்டிக்கும் அல்லது உத்தரவிடும் அதிகாரம் கொண்டது என நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் இது ஊடகத்துறையினரின் நேரடி ஈடுபாட்டைக் கோரும் ஒரு சுய ஒழுங்குமுறை நிறுவனமாகும்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அவரைப் பொறுத்தவரை, மலேசிய ஊடக மன்றத்தின் செயல்திறன் அதன் கட்டமைப்பு, செயல்பாட்டு முறைகள் மற்றும் அது எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே அளவிடப்பட வேண்டுமே தவிர, சுதந்திரமான அமைப்பு என்ற வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

"ஊடக நெறிமுறைகள் மீறப்படும்போது அதனைத் தட்டிக் கேட்கும் தைரியம் மன்றத்திற்கு இருக்க வேண்டும். அதே வேளையில், ஊடகவியலாளர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது அழுத்தங்களுக்கு ஆளானால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். இதுவே சுய ஒழுங்குமுறைக் கருத்தாக்கத்தின் உண்மையான சோதனையாகும்," என்றார் அவர்.

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான சில விவகாரங்களில் மலேசிய ஊடக மன்றம் இன்னும் பெரிய அளவில் முன்னிலைப் படுத்தப்படவில்லை என்ற கருத்து குறித்துப் பதிலளித்த அவர், இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்றார். மக்கள் இந்த நிறுவனத்தின் பங்கைத் தெளிவாகப் பார்க்க விரும்புகிறார்கள்.

"ஒரு புதிய நிறுவனமாக, நாங்கள் திரைக்குப் பின்னால் மட்டுமே செயல்பட்டால், பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எங்களது செயல்பாடு தெரியாது. இம்மன்றம் எப்போதும் எதிர்வினையாற்றும் வகையிலோ அல்லது மிகவும் அமைதியாகவோ இருக்க முடியாது," என்று ரட்ஸி மேலும் கூறினார்.

பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசியவிடப்படுவது மற்றும் டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் ஆகியவை தொடர்பில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரம் சம்பந்தப்பட்டிருப்பதால், அதனை மலேசிய ஊடக மன்றம் மிகத் தீவிரமாகக் கருதுகிறது.

புகார்களை முறையாகப் பதிவு செய்து, வடிகட்டி, கையாள்வதற்காக இணையம் வழி அதிகாரப்பூர்வப் புகார் படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளதும் இதில் அடங்கும்.

"மலேசிய ஊடக மன்றம் வெறும் 'ஒழுங்கு நடவடிக்கை' (disciplinary response) எடுக்கும் அணுகுமுறையை மட்டும் கொண்டிருக்காமல், 'தரநிலை ஆதரவு' (standards support) என்ற அணுகுமுறையையும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

"அதாவது, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, செய்தி சேகரிப்பு நெறிமுறைகள் அல்லது டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது, அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வழிகாட்டுதல்களை உருவாக்கி, ஆலோசனைகளை வழங்கி, சூழ்நிலையை மதிப்பிடுவதில் மன்றம் உதவும்," என அவர் விவரித்தார்.

"நேர்மையான ஊடகம், நம்பகத்தன்மையின் ஆணிவேர்" (Media Berintegriti, Teras Kredibiliti) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு ஹவானா கொண்டாட்டம் வெறும் சம்பிரதாய நிகழ்வாக மட்டும் இல்லாமல், நாட்டின் ஊடகத்துறை எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகளை விவாதிக்கும் தளமாக அமைய வேண்டும் என ரட்ஸி நம்பிக்கை தெரிவித்தார்.

தகவல் தொடர்பு அமைச்சு மற்றும் பெர்னாமா செய்தி நிறுவனம் இணைந்து நடத்தும் இவ்வாண்டுக்கான ஹவானா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வு, எதிர்வரும்
ஜூன் 20-ஆம் தேதி பினாங்கில் நடைபெறவுள்ளது. மலேசிய ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு, பங்களிப்பு மற்றும் தொழில்முறையை அங்கீகரிக்கும் முக்கிய தேசியத் தளமாக இந்நிகழ்வு அமையும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.