ஷா ஆலாம், மே 25: கோலாலம்பூர், ஜாலான் ஸ்டேஷன் சென்ட்ரலில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இன்று அதிகாலை உள்ளூர் ஆடவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு சில வெளி நாட்டவர்கள் கலந்து கொண்ட 'போதைப் பொருள் விருந்து' அம்பலமானது.
அதிகாலை 4 மணியளவில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கெட்டமைன் மற்றும் எக்ஸ்டசி (ecstasy) மாத்திரைகள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
31 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் ஜாலான் ஸ்டேஷன் சென்ட்ரலில் உள்ள ஹோட்டலிலிருந்து கோலாலம்பூர் மருத்துவமனையின் (எச்.கே.எல்) அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப் பட்டதாகவும் அதிகாலை 3 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ஹூ சாங் ஹுக் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (ஐபிடி) போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் (ஜேஎஸ்ஜேஎன்) சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழு அதிகாலை 4 மணியளவில் அந்த ஹோட்டல் அறையில் சோதனை நடத்தியதாக அவர் கூறினார்.
இந்த சோதனையில் இரண்டு உள்ளூர் ஆடவர்கள், இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள், மற்றும் ஹாங்காங், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தலா ஒருவர் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
"அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 கிராம் எடையுள்ள கெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பிளாஸ்டிக் பொட்டலம் மற்றும் 0.7 கிராம் எடையுள்ள மூன்று எக்ஸ்டசி மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டன," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணைகளுக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 12(2) மற்றும் பிரிவு 15(1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, அந்த ஆடவரின் இறப்பு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்த பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"உடல் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய பிரேதப் பரிசோதனை நண்பகல் 12 மணியளவில் முடிவடைந்தது. இறப்புக்கான காரணம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை, ஆய்வக பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் ஆடவர் உயிரிழப்பு: போதைப் பொருள் விருந்து அம்பலம்
25 மே 2026, 2:12 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருடிய வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார்
Pakiya
31 மே 2026

national
ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: விசாரணைக்கு உதவ இரு ஆடவர்கள் கைது
Pakiya
22 மே 2026

national
சிறுவனைத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரில் முதிய பராமரிப்பாளர் கைது
Pakiya
22 மே 2026

selangor
சிறையில் அடைக்கப்பட்ட நபர், டீன் ஏஜ் பாலியல் வன்கொடுமை
Pakiya
13 மே 2026

உங்கள் கருத்து என்ன?




