கோலாலம்பூர், மே 31: நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 'கான்ஸ்பிரசி' (Konspirasi) திரைப்படத்தின் திரையிடலை நிறுத்தும் முடிவு, எந்தவொரு வெளித் தரப்பினரின் அழுத்தமும் இன்றி நிர்வாகத்தால் உள்நாட்டிலேயே எடுக்கப் பட்டதாக தயாரிப்பு நிறுவனமான எலிப்ஃபிலிம் என்டர்டெயின்மென்ட் (Elepfilm Entertainment) செண்டிரியான் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது எந்த வகையிலும் ஒரு விளம்பர யுக்தி அல்லது சந்தைப்படுத்தல் தந்திரமோ அல்ல என்றும் அந் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"இது தொடர்பான எந்தவொரு யூகங்களையும், அனுமானங்களையும் அல்லது உண்மையான தகவல்களை பரப்புவதையும் அனைத்துத் தரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எலி பிலிம் என்டர்டெயின்மென்ட் கேட்டுக் கொள்கிறது," என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்திரைப் படத்தின் வெளியீடு குறித்துபல்வேறு தரப்பினரும் வழங்கிய பின்னூட்டங்கள், ஆதரவு மற்றும் கருத்துகளைத் தாங்கள் பெரிதும் மதிப்பதாக எலி பிலிம் என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது.
"கான்ஸ்பிரசி திரைப்படத்தில் பங்காற்றியுள்ளன படைப்பாற்றல் மிக்க கலைஞர்களுக்கும், ஒட்டுமொத்த உள்ளூர் திரைப்படத் துறைக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த மே 28 ஆம் தேதி முதல் இத் திரைப் படத்தின் திரையிடல் நிறுத்தப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளரின் சொந்தக் கோரிக்கைக்கு இணங்க நாடுமுழுவதும் உள்ள திரையரங்குகள் கான்ஸ்பிரசி திரைப்படத்தின் திரையிடல் நிறுத்தப்பட்டதாக மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (FINAS) கடந்த மே 29 ஆம் தேதி உறுதிப்படுத்தி இருந்தது.
மலேசியத் திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் (MAFE) மற்றும் திரையரங்குகளுடன் தொடர்பில் இருக்கும் திரைப்பட விநியோக மீடியா பிரிமா பெர்ஹாட் (Media Prima Bhd) ஆகியவற்றிடம் இருந்து இது தொடர்பான தகவல்கள் தங்களுக்குக் கிடைக்கப் பெற்றதாக ஃபினாஸ் தெரிவித்திருந்தது.
காஸ் அபு பாக்கார் (Ghaz Abu Bakar) இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சாரிமா இப்ராஹிம், டத்தோ அதி புத்ரா, ஹிஸ்யாம் ஹமீட், அலிசியா அமின், ஷிகின் கமாள், ரோய் அஸ்மான் மற்றும் இஸ்மா டேனியல் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




