கோலாலம்பூர், மே 30: 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பதற்கான வயது சரிபார்ப்பு முறையாக MyDigital ID-யைப் பயன்படுத்துவது, இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பயனர் தரவைப் பாதுகாப்பதோடு, தொழில் நுட்ப நிறுவனங்கள் முக்கியத் தகவல்களைச் சேகரிப்பதைத் தடுக்கும்.
இந்த அரசாங்க அடையாளச் சரிபார்ப்பு அமைப்பு ஒரு பாதுகாப்பு அடுக்காகச் செயல்பட்டு, சமூக ஊடக தளங்கள் பயனரின் தனிப்பட்ட அடிப்படைத் தகவல்களை அணுக முடியாததை உறுதி செய்கிறது என்று தேசிய இணையப் பாதுகாப்பு முகமையின் (NACSA) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மெகாட் சுஹைரி மெகாட் தாஜுதீன் கூறினார்.
தரவு ரகசியத்தன்மை தொடர்பான கவலைகள் குறித்து பேசிய அவர், அடிக்கடி ஹேக்கர்களின் இலக்காக மாறும் சமூக ஊடக தளங்களில் பயனர்கள் தங்கள் முக்கியமான தகவல்களை பகிர வேண்டிய அவசியத்தை இந்த அமைப்பு நீக்குகிறது என்றார். "MyDigital ID-க்கு பயனர்கள் தங்களின் பௌதீக அடையாள அட்டையின் (physical ID) நகலை அனுப்பவோ அல்லது சேமிக்கவோ தேவையில்லை; மேலும் கைரேகை அல்லது முகத்தோற்றம் போன்ற பயோமெட்ரிக் தரவுகளையும் இது சேமிக்காது.
மாறாக, முக்கியத் தரவுகள் பாதுகாப்பான மற்றும் நம்பகமான அரசாங்க அமைப்பிற்குள் இருப்பதை உறுதிசெய்ய, தேசியப் பதிவு இலாகாவின் (JPN) அதிகாரப்பூர்வ பதிவுகள் மூலம் இது பயனரைச் சரிபார்க்கிறது," என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
பாதுகாப்பான சரிபார்ப்பு அடுக்கை உருவாக்குவதன் மூலம் இந்த அணுகுமுறை தரவுகள் வெளிப்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது என்று மெகாட் சுஹைரி கூறினார்.பயனர் குறிப்பிட்ட வயது வரம்பை பூர்த்தி செய்கிறாரா என்பது போன்ற அவசியமான சரி பார்ப்பை மட்டுமே சமூக ஊடக தளங்கள் பெறும் என்றும், பயனரின் தனிப்பட்ட விவரங்களை அவை அணுக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
"தரவு பகிர்வை மட்டுப்படுத்துவது, தரவு நகலெடுப்பதைத் தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பான தேசிய அமைப்பில் மையப் படுத்தப்பட்ட சரிபார்ப்பை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம், குழந்தைகளின் தனியுரிமைக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இணையத்தில் அவர்களைப் பாதுகாப்பது இதன் தெளிவான நோக்கமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.
பயனர்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் கடுமையான தரவு சேமிப்புக் கொள்கைகளைச் செயல் படுத்துவதாக அவர்உறுதியளித்தார். "தனிப்பட்ட தரவுகளை சட்ட தேவைகளுக்கு ஏற்ப அவசியமான காலத்திற்கு மட்டுமே சேமிக்கப்படும். தரவுகள் தவறாகப் பயன்படுத்த படுவதையும், அங்கீகாரமற்ற முறையில் அணுக படுவதையும் அல்லது தேவையற்ற வகையில் சேமிக்கப் படுவதையும் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதில் உள்ளன," என்றார் அவர்.
போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதை விட, MyDigital ID மூலம் நேரடி முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் இணைந்த பௌதீக மை காட் (MyKad) சரிபார்ப்பு மிகவும் பாதுகாப்பானது என்றும், இது விதிகளை மீற முயற்சிக்கும் பதின் வயதினருக்கான தடைகளை அதிகரிக்கும் என்றும் மெகாட் சுஹைரி கூறினார்.
விதிகளை மீற துணியும் பதின்வயதினர் தொடர்ந்து இந்த அமைப்பில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள் என்பதை ஒப்புக் கொண்ட அவர், அதற்கேற்ப அரசாங்கம் சட்ட விதிகளையும் முன்கூட்டியே வலுப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இணையப் பாதுகாப்பு மசோதா அறிமுகப் படுத்தப் படும் போது, கடவுச்சொல்லை அனுமதியின்றிப் பகிர்தல் அல்லது மற்றவர்களின் டிஜிட்டல் அடையாளத் தகவல்களை வழங்குதல் போன்ற டிஜிட்டல் அடையாள சேவைகளைத் தவறாக பயன்படுத்தும் குற்றங்களுக்குக் குறிப்பிட்ட தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"டிஜிட்டல் அடையாளங்கள் தவறாகப் பயன் படுத்தப் படுவதை சட்டத்தின்படி திறம்பட கையாளுவதை உறுதி செய்வதால் இது மிகவும் முக்கியமானது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வயது வரம்பைக் கொண்டுவரும் மலேசியாவின் நடவடிக்கை ஒரு சரியான முடிவு என்று வர்ணித்த மெகாட் சுஹைரி, மலேசியா தனித்துச் செயல்படவில்லை என்றும், ஆபத்தான உள்ளடக்கம், இணையக் கொடுமை (cyberbullying) மற்றும் இணையச் சுரண்டல்-களிலிருந்து இளைய பயனர்களைச் சிறப்பாகப் பாதுகாப்பதற்கான பரந்த உலகளாவிய மாற்றத்தின் ஒரு பகுதி இது என்றும் கூறினார்.
ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் (ONSA) கீழ் இரண்டு புதிய நெறிமுறைகள் செயல்படுத்தப் படுவதைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பயனர்கள் வயது சரிபார்ப்பிற்காக அரசாங்கம் வழங்கிய அதிகாரப்பூர்வ அடையாள ஆவணம் வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (MCMC) அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு நெறிமுறை (CPC) மற்றும் இடர் குறைப்பு நெறிமுறை (RMC) ஆகிய இரண்டு நெறிமுறைகளின் கீழ், 16 வயதுக்குட் பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் திறப்பதைத் தடுக்க, பயனர்கள் தங்களது வயதை உறுதிப் படுத்திக் கொள்ள அரசாங்கம் வழங்கிய ஆவணத்தைப் பதிவேற்ற வேண்டும்.-- பெர்னாமா



