இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு; பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல

30 மே 2026, 4:41 AM
இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு; பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல

சைபர் ஜெயா, மே 30 - இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில், அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள அனைத்து பெரியவர்களும் தங்களின் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இணையப் பாதுகாப்பு குழுவின் (OSC) தலைவர் டான் ஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோர்களை மட்டுமே சார்ந்தது அல்ல என்றும், இதில் ஆசிரியர்கள்,பராமரிப்பாளர்கள்,
அத்தை, மாமா உட்பட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் முக்கியப் பங்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

"பராமரிப்பாளர்கள், பெற்றோர், அத்தை, மாமா என குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் அனைத்து பெரியவர்களும் இதற்குப் பொறுப்
பேற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

"அதாவது, குழந்தைகளின் நலன் எக்காலத்திலும் பாதுகாக்கப்
படுவதையும், அவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதோடு, அவர்களின் உடல் மற்றும் மன பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அனைத்து மலேசியர்களுக்கும் கடமை உள்ளது," என்று அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இணையத்தில் நடைபெறும் சுரண்டல்கள், துஷ்பிரயோகங்கள், ஆபத்தான உள்ளடக்கங்கள் மற்றும் இணையப் புறக்கணிப்பு உள்ளிட்ட அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வையும் கூட்டுப் பொறுப்பையும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இணையத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹஸ்னா, குழந்தைகள் சிறு வயதிலேயே டிஜிட்டல் திறன்களை அதிகம் கற்றுக்
கொள்வதால், அவர்களின் இணையச் செயல் பாடுகளைக் கண்காணிப்பதில் பெற்றோரும் சட்டப்பூர்வப் பாதுகாவலர்களும் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

"இன்றைய காலகட்டத்தில் ஒன்பது வயது குழந்தை, ஒரு பதின்ம வயது சிறுவனை விட டிஜிட்டல் பயன்பாட்டில் அதிகத் திறன் கொண்டிருக்கலாம். சமூக ஊடகங்களில் பல்வேறு ஆபத்துகள் உள்ளதால், குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கண்காணித்து அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்," என்று மலாயா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான அவர் கூறினார்.

தீங்கற்றது போல் தோன்றும் இணைய உள்ளடக்கங்கள் கூட குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும், குழந்தைகளுக்கு ஏற்ற உள்ளடக்கங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து பாலியல் குற்றவாளிகள் மற்றும் மோசடி நபர்கள் குழந்தைகளை ஏமாற்ற வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

"குழந்தைகள் அது மிஸ் ரேச்சல் (கல்வியாளர் மற்றும் யூடியூபர்) என்று நினைக்கலாம், ஆனால் உண்மையில் அது அவர் அல்ல. மிஸ் ரேச்சலைப் போல் தோற்றமளிக்கும் வேறொரு நபராக இருக்கலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

சில பெற்றோர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அளவுக்கு அதிகமாகப் பகிர்வது குறித்தும் ஹஸ்னா கவலை தெரிவித்தார். இது நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் மற்றும் விளைவுகளைப் பலர் இன்னும் புரிந்து
கொள்ள வில்லை என்றார்.

மற்ற நாடுகள் கையாளும் அணுகுமுறைகளைத் தங்கள் குழு தொடர்ந்து ஆராயும் என்றும், அதே வேளையில் மலேசியாவின் சமூக மற்றும் சட்டச் சூழலுக்கு ஏற்ற பரிந்துரைகள் மட்டுமே முன்வைக்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

2025-ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் (ONSA) கீழ் ஒரு சுதந்திரமான அமைப்பாகச் செயல்படும் OSC, இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், டிஜிட்டல் தளங்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கவும் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு (MCMC) தகுந்த நடவடிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் பரிந்துரைக்கும் என்றார்.

"நாங்கள் ஒரு சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட்டு, சமூக ஊடகத் தளங்கள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதோடு, எதிர்காலத்தில் பயனர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்குவோம்," என்று அவர் மேலும் கூறினார்.

பெற்றோருக்கும் சமூகத்திற்கும் இணையப் பாதுகாப்பு குறித்த தகவல்களைத் திறம்படக் கொண்டு சேர்க்க, அச்சு ஊடகங்களை மட்டுமே சார்ந்திருக்காமல், வலையொலிகள் (podcasts) மற்றும் காணொளிகள் போன்ற டிஜிட்டல் அணுகுமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஹஸ்னா கூறினார்.

"குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக வலையொலிகள் தேவைப்படலாம். ஏனெனில் ஒரு பிரச்சினையைப் புரிந்து கொள்ள மக்கள் அதைப் பார்க்கவும் கேட்கவும் வேண்டும். இணையத்தில் உள்ள ஆபத்துகளைப் பலரும் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன்," என்றார்.

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ள ONSA சட்டம், இணையத்தில் உள்ளடக்கங்களை வழங்கும் தளங்களுக்குத் தெளிவான பொறுப்புகளை நிர்ணயிப்பதன் மூலம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் வைரலான பிறகு அகற்றுவது மட்டுமல்லாமல், அதனைக் கண்டறிந்து, தடுத்து, விரைவாகச் செயல்படுவதையும் உறுதி செய்கிறது.

இச்சட்டத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் பாதுகாப்புக் குறியீடு (CPC) மற்றும் அபாயக் குறைப்புக் குறியீடு (RMC) ஆகிய இரண்டு புதிய குறியீடுகள் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதன் மூலம், டிஜிட்டல் தளங்கள் தீங்கு விளைவிக்கும்
உள்ளடக்கங்க-ளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியது கட்டாயமாக்கப் படுவதுடன் இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பும் மேலும் வலுப்படுத்தப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.