பெட்டாலிங் ஜெயா பொது மருத்துவமனைத் திட்டம் 2027 வரவு செலவுத் திட்டம், RMK 13-இல் சேர்க்கப்பட வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர்

29 மே 2026, 9:21 AM
பெட்டாலிங் ஜெயா பொது மருத்துவமனைத் திட்டம் 2027 வரவு செலவுத் திட்டம், RMK 13-இல் சேர்க்கப்பட வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், மே 29: பெட்டாலிங் ஜெயா பொது மருத்துவமனை நிர்மாணிப்புத் திட்டம் தாமதமின்றி நிறைவேறுவதை உறுதிசெய்ய, அத்திட்டம் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் 13ஆவது மலேசியத் திட்டத்திலும் (RMK13) சேர்க்கப்பட வேண்டும்.

கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறுகையில், பெட்டாலிங் ஜெயா மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்குப் பொதுச் சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்த இத்திட்டம் எவ்விதத் தடங்கலும் இன்றி முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியம் என்றார்.

நிலம் கையகப்படுத்துதல், அதற்கான முன்னேற்பாடுகள், திட்ட அனுமதிகள், உள்கட்டமைப்பு மதிப்பீடு மற்றும் திட்ட நிர்வாகக் குழு அமைத்தல் ஆகிய பணிகளை முன்கூட்டியே தொடங்குவதற்கு, சுகாதார அமைச்சு (KKM) 2027 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

"2027 வரவு செலவுத் திட்டத்தின் வழி நிதி அளிக்கப்படும் இத்திட்டம், 2028-இல் எதிர்பார்க்கப்படும் RMK13-இன் ரோலிங் திட்டத்தில் (Rolling Plan - RP3) இணைக்கப் படுவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், 2028 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நடைபெறும் மலேசியத் திட்டத்தின் இடைக்கால மதிப்பாய்விலும் (Kajian Separuh Penggal) இத்திட்டத்தின் முன்னேற்றம் கவனத்தில் கொள்ளப் படுவது முக்கியம்," என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் பொது மருத்துவமனைக்கான நிலம் இறுதி செய்யப்பட்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரின் அறிவிப்புகளை லிம் யி வெய் வரவேற்றார்.

இருப்பினும், மாநில அரசும் சுகாதார அமைச்சும் நிலத்தின் பயன்பாட்டுத் தகுதியை (status tanah) மாற்றுவது உள்ளிட்ட நில நிர்வாகப் பணிகளைத் துரிதப் படுத்தி, திட்டத்தை விரைவாக உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் நிலத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமானால் அது ஒட்டுமொத்தத் திட்டத்தையும் பாதிக்கக் கூடும் என்பதால் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மிக முக்கியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

"நிதி வழிமுறைகள் மற்றும் நிலத்தின் நிலையை மாற்றுதல் போன்றவற்றை முன்கூட்டியே தயார் செய்வதன் மூலம், நிலம் கையகப்படுத்துவதற்கான இறுதிச் செலவு மிக அதிகமாகப் போவதைத் தவிர்க்கலாம். செலவு அதிகரித்தால், சுகாதார அமைச்சு மாற்று இடத்தைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே, பழைய தவறுகள் மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க, இத்திட்டம் நிச்சயமாகச் செயல்படுத்தப் படுவதை உறுதிசெய்ய நில விவகாரங்கள் உடனடியாகப் பேசி தீர்க்கப்பட வேண்டும்," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

புதிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால், அதுவரையிலான காலக்கட்டத்தில் பொதுச் சுகாதாரச் சேவைகளின் திறனை மேம்படுத்துவதற்கான தற்காலிகத் தீர்வுகளையும் அவர் முன்மொழிந்தார். அக்காலக்கட்டத்தில் பெட்டாலிங் ஜெயா மக்கள் மலிவான மற்றும் அவசரச் சுகாதாரச் சேவைகளைப் பெறுவது அவசியம் என்றார்.

"சுகாதாரச் சேவை என்பது பொது மக்களுக்கான அடிப்படை உரிமையாகும்; இது சிக்கன நடவடிக்கைகளாலோ அல்லது லாப நோக்கத்தாலோ பாதிக்கப்படக் கூடாது. பணியாளர் பற்றாக்குறை, நியாயமான ஊதியம், அதிக பணிச்சுமை மற்றும் மருத்துவமனை நெரிசல் ஆகிய பிரச்சனைகளைக் களைய நாம் முன்வர வில்லை என்றால், பெட்டாலிங் ஜெயாவில் அமையும் புதிய பொது மருத்துவமனையாலும் கூட மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம்," என அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.