கோலாலம்பூர், மே 29 - சமூக ஊடகங்களில் சரிபார்ப்பு மற்றும் பத்திரிகை நெறிமுறைகள் இன்றி பரபரப்பான செய்திகளை பரப்பும் "உடனடி பத்திரிகையாளர்கள்" அதிகரித்து வருவது, கவலைக்குரிய கட்டத்தை எட்டியுள்ளதுடன், மக்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
டிஜிட்டல் உலகின் வளர்ச்சி, திறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் வரம்புகளின்றி தகவல்களைப் பகிர வழிவகுத்துள்ளது என்று முன்னாள் ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் செய்தி வாசிப்பாளருமான சார்ல்ஸ் மோகன் கூறினார்.
இந்த வளர்ச்சி தொழில்நுட்ப சுதந்திரத்தைப் பிரதிபலித்தாலும், ஒரு சில பயனர்கள் பார்வையாளர்களையும் கவனத்தையும் ஈர்ப்பதற்காகப் பரபரப்பான உள்ளடக்கங்களைப் பரப்பும் போக்கு ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்றார் அவர்.
"அரசர், மதம் மற்றும் இனம் (3R) சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளும் கையாளப்படும் போது இந்த நிலைமை இன்னும் மோசமடைகிறது, இது மக்களிடையே தவறான புரிதல்களைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
"திறன் பேசிகள் இருப்பதால், யார் வேண்டுமானாலும் சமூக ஊடகங்களில் 'செய்தி நிருபராக' செயல்பட முடிகிறது. இதன் விளைவாக, சரிபார்க்காமல் 3R பிரச்சினைகள் உட்பட பரபரப்பான தகவல்களால் மக்கள் எளிதில் ஈர்க்கப் படுகிறார்கள்," என்று அவர் நேற்று இரவு பெர்னாமா டிவி-யின் 'ருவாங் பிச்சாரா' நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்டபோது கூறினார்.
மேலும், சமூக ஊடகப் பயனர்களிடையே நிலவும் "பகிர்ந்த பிறகு சரிபார்க்கும்" கலாச்சாரம், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதற்குப் பங்களிப்பதாக சார்ல்ஸ் கூறினார்.
ஒரு தகவலை நம்புவதற்கு அல்லது பரப்புவதற்கு முன், மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதோடு, உண்மையான செய்தி மூலங்களை உறுதிப்படுத்திக் கொண்டு உயர் ஊடகக் கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மலேசிய தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) மற்றும் ரேடியோ டெலிவிஷன் மலேசியா (RTM) போன்ற முன்னணி ஊடக நிறுவனங்கள் முக்கிய குறிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு செய்தியும் வெளியிடப்படுவதற்கு முன்பு கடுமையான வடிகட்டுதல் மற்றும் படத்திட்ட செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
"'கேட்கீப்பர்' அல்லது செய்தி ஆசிரியர் மிக உயர்ந்த பொறுப்புணர்வையும் நெறிமுறைகளையும் கொண்டுள்ளார். ஒரு தகவல் பொதுமக்களுக்கு வெளியிடப்படுவதற்கு முன்பு, அதன் நம்பகத் தன்மையைப் பாதுகாக்க, அது முழுமையாக வடிகட்டப்பட்டு, மதிப்பிடப்பட்டு, சரிபார்க்கப்படும்," என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், உண்மையான செய்தி உள்ளடக்கங்களில் இளம் தலைமுறையினரின் ஆர்வத்தை ஈர்க்க, முன்னணி ஊடக நிறுவனங்கள் வடிவமைப்பு மற்றும் ஆற்றல்மிக்க காட்சி அணுகுமுறைகளில் படைப்பாற்றல் கூறுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் சார்ல்ஸ் பரிந்துரைத்தார்.
"நாம் தற்போதுள்ள வாசகர் வட்டத்தில் மட்டும் திருப்தி அடையக் கூடாது. மாறாக, வடிவமைப்பு, காட்சிப் படைப்பாற்றல் மற்றும் தகவல் வழங்கும் முறைகள் ஆகியவை தற்போதைய டிஜிட்டல் போக்குகளுக்கு ஏற்ப தொடர்ந்து மதிப்பிடப்பட்டு மாற்றியமைக்கப் பட வேண்டும்.
"உண்மையான செய்திகள் இளைஞர்களின் மனதிற்கு நெருக்கமான வடிவத்தில் தொகுக்கப்படும் போதுதான், சமூக ஊடகங்களில் பெருகிவரும் பரபரப்பான உள்ளடக்கங்களுடன் நாம் போட்டியிட முடியும்," என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
சரிபார்ப்பு மற்றும் பத்திரிகை நெறிமுறைகள் இன்றி பரபரப்பான செய்திகள் வெளியிடும் "திடீர் பத்திரிகையாளர்கள்" அதிகரிப்பு, கவலைக்குரியது
29 மே 2026, 4:39 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைnational
உங்கள் கருத்து என்ன?

