கோத்தா பாரு, 29 மே - அடைபட்ட சாக்கடைகள், வளர்ந்துள்ள புற்கள் மற்றும் கைவிடப்பட்ட பொது வசதிகள் குறித்து சமூகத்தின் ஒரு பகுதியினர் சமூக ஊடகங்களில் குறை கூறிக் கொண்டிருக்கும் வேளையில், சிலரோ புல்வெட்டும் இயந்திரங்கள் மற்றும் துப்புரவுக் கருவிகளுடன் களத்தில் இறங்கி கோத்தா பாரு நகரைத் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க உதவுகின்றனர்.
எந்தவொரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல், புகழைத் தேடாமல், 25 வயதான முகமது ரிசால் அமின் சோரியா தனது சில நெருங்கிய நண்பர்களுடன், கிளந்தான் மாநிலத்தின் நற்பெயரைக் காக்கும் பொறுப்புணர்வும் ஆழ்ந்த அன்பு காரணமாக, கடந்த ஒரு வருடமாக 'ஹியாஸ் கம்யூனிட்டி' (Hiyaz Community) என்ற அமைப்பின் மூலம் தன்னார்வத் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தன்னார்வ இயக்கம் சிறிய அளவில், தங்களுக்குச் சொந்தமான ஒரே ஒரு புல்வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, பொது நடைபாதைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொழுது போக்குப் பூங்காக்கள் போன்ற பகுதிகளில் புல் வெட்டுவது மற்றும் புதர்களைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளுடன் தொடங்கியதாக முகமது ரிசால் அமின் கூறினார்.
"சுற்றுப்புறத்தை அழகுபடுத்த உதவுவதே எங்கள் ஒரே நோக்கமாக இருந்தது," என்று அவர் பெர்னாமாவிடம் சமீபத்தில் கூறினார்.
ஹியாஸ் கம்யூனிட்டி சமூக ஊடகங்களில் பதிவேற்றப் பட்ட துப்புரவுப் பணிகள் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலானதைத் தொடர்ந்து, புல் வெட்டும் இயந்திரங்கள், வாட்டர் ஜெட் போன்ற உபகரணங்கள் நன்கொடையாகக் கிடைத்தன.
கூடுதல் உபகரணங்கள் கிடைத்தால் பாதசாரிகள் நடைபாதை, அடைபட்ட கால்வாய்கள், மரங்களை வெட்டுதல் மற்றும் பொது வசதிகளுக்கு வர்ணம் பூசுதல் என துப்புரவுப் பணிகளின் நோக்கமும் விரிவடைந்தது என்று அவர் கூறினார்.
"ஹியாஸ் கம்யூனிட்டி பரவலாக அறியப்பட்ட பிறகு, நீண்ட காலமாக பராமரிக்கப் படாத அல்லது உள்ளூர் அதிகாரசபையின் (PBT) நடவடிக்கைக்காகக் காத்திருக்கும் பகுதிகள் குறித்து மக்களிடமிருந்து பல புகார்கள் வரத் தொடங்கின," என்றார் அவர்.
"பெரிய அளவிலான பணிகளுக்கு அதிக ஆள்பலமும் செலவும் தேவைப்படுவதால், எங்களின் கவனம் சிறிய பராமரிப்புப் பணிகளில் உள்ளது. எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்களின் நிலையை நாங்கள் சரி பார்ப்போம்," என்று அவர் மேலும் கூறினார்.
முழுநேர வரைகலை வடிவமைப்பாளராகப் பணிபுரிவதால், முகமது ரிசால் அமின் பெரும்பாலான துப்புரவுப் பணிகளை இரவிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ மேற்கொள்கிறார்.
இதுவரை கோத்தா பாரு நகரைச் சுற்றி புல் வெட்டுதல், சாக்கடைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் பொது வசதிகளைப் பராமரித்தல் என சுமார் 100 துப்புரவுப் பணிகளை அவர்கள் மேற் கொண்டுள்ளனர்.
ஹியாஸ் கம்யூனிட்டியின் முக்கிய நோக்கம், பொது வசதிகளைப் பாதுகாத்து, அவை சமூகத்தின் வசதிக்காக நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதாகும்.
"நாங்கள் அதிகாரிகளின் பணிகளைப் பறிக்கவோ அல்லது யாருடைய குறைகளையும் சுட்டிக் காட்டவோ விரும்பவில்லை. இந்த நகரம் தூய்மையாகவும், மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், நன்கு பராமரிக்கப் பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்றார் அவர்.
"அதே நேரத்தில், எங்களின் இந்த முயற்சி பொதுமக்களிடையே சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறோம்," என்று சமூக ஊடகங்களில் 65,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்ட அவர் கூறினார்.
தன்னார்வப் பணிகளில் தனக்குள்ள ஆர்வம், பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே சமூகத்திற்கு உதவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தனது மறைந்த தாயாரிடமிருந்து வந்ததாக முகமது ரிசால் அமின் தெரிவித்தார்.
"மற்றவர்களின் துன்பத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது என்று என் மறைந்த தாயார் அடிக்கடி கூறுவார். அந்த ஆலோசனையை நான் இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்," என்றார் அவர்.
"நான் இதை மனப்பூர்வமாகவும் நேர்மையாகவும் செய்கிறேன். ஒரு மாற்றம் நிகழ்வதையும், மக்கள் சிறந்த சூழலை அனுபவிப்பதையும் காணும்போதுதான் உண்மையான மனநிறைவு கிடைக்கிறது," என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
தூய்மையில் அக்கறை: நகரைச் சுத்தப்படுத்த இளைஞர்கள் முன்முயற்சி
29 மே 2026, 4:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
வகைnational
உங்கள் கருத்து என்ன?

