புத்ராஜெயா, மே 29 - மலேசியாவில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நாடு தழுவிய அளவில் 5,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை சுற்றுச்சூழல் துறை (DOE) நடத்தியுள்ளது.
இந்தச் சோதனைகளின் மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய வழக்குகளுக்கு மொத்தம் 45 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்திற்கு உட்பட்ட 4,339 வளாகங்களில் மொத்தம் 5,074 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனைகளில் செம்பனை ஆலைகள், இயற்கை ரப்பர் தொழிற்சாலைகள், கழிவு மீட்பு நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சாத்தியம் கொண்ட பல்வேறு தொழில்துறை வளாகங்கள் இலக்கு வைக்கப்பட்டன.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில், சுற்றுச்சூழல் தரச் சட்டத்திற்கு இணங்கத் தவறிய தரப்பினருக்கு எதிராக 3,149 அடுத்தகட்ட அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அமலாக்க நடவடிக்கைகளில் 1,587 உத்தரவு அறிவிப்புகள், 1,369 அபராதங்கள், 44 உபகரணச் செயல்பாட்டு முடக்க நடவடிக்கைகள், 2 உரிம இடைநீக்கங்கள், 18 தடை உத்தரவுகள் மற்றும் வழக்குத் தொடுப்பதற்காக 129 விசாரணை ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், நீதிமன்ற விசாரணைகள் பூர்த்தியடைந்த 148 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளுக்கு மொத்தம் 45 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரிங்கிட் அபராதமும், ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதே காலக்கட்டத்தில், மோட்டார் வாகனங்களின் புகை உமிழ்வு தொடர்பாக நாடு முழுவதும் 1 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனையிடப்பட்டு, 1,906 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதோடு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அங்கீகாரம் பெற்ற திட்டங்களில் 811 ஆய்வுகளும் நடத்தப்பட்டன. குறிப்பாக, நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கழிவுகள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியாக, முக்கியத் துறைமுகங்களில் 51 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் நச்சு மற்றும் மின்னணுக் கழிவுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட 702 கொள்கலன்கள் சோதனையிடப்பட்டதில், 427 கொள்கலன்களில் விதிமுறைகளுக்குப் புறம்பான கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவற்றை உடனடியாக மலேசியாவை விட்டு வெளியேற்றுமாறு 73 உத்தரவு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டு, இதுவரை 53 கொள்கலன்கள் வெற்றிகரமாக அவற்றின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அதே வேளையில், திறந்தவெளி எரிப்புச் சம்பவங்களைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் கண்டறியப்பட்ட 494 முக்கியப் பகுதிகள் உட்பட மொத்தம் 3,237 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை மிகவும் திறம்பட மற்றும் உத்தியோகபூர்வமாகக் கண்காணிக்கவும், அமலாக்கப் பணிகளுக்கு உதவவும் 409 முறை ட்ரோன் (Drone) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் சுற்றுச்சூழல் துறைக்கு 6,252 சுற்றுச்சூழல் மாசு புகார்கள் கிடைத்துள்ளதாகவும், அவை அனைத்தும் கால வரம்பிற்குள் முறையாக விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை தெரிவித்தது.



