ஜொகூர் பாரு, மே 29: இங்குள்ள உலு திராம், கம்போங் தெனாங்கில் நேற்று குர்பான் வழிபாட்டிற்கு உதவிய போது எருமை மாடு தாக்கியதில் உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
காலை 10 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார். எருமை மாடு முட்டியதில் காயமடைந்த 45 வயதுடைய அந்த ஆடவர், உடனடியாக சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
"இருப்பினும், அன்றைய தினம் இரவு 11 மணியளவில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப் பட்டது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி, அவரது இடது காலில் உள்ள இரத்த நாளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இங்குள்ள கம்போங் சுங்கை திராம், பத்து 19-இல் நேற்று நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், எருமை மாடு ஒன்று திடீரென மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் 45 வயதுடைய மற்றொரு உள்ளூர் ஆடவர் இடது விலா எலும்பு முறிந்து காயமடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இச்சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் தற்போது சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மேல் நடவடிக்கைக்காக ஜொகூர் மாநில கால்நடை மருத்துவத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே வேளையில், இந்தச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித யூகங்களையும் அல்லது தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாம் என முகமட் சுஹைமி அறிவுறுத்தினார்.
குர்பான் வழிபாட்டிற்கு உதவியபோது எருமை மாடு தாக்கி ஆடவர் உயிரிழப்பு
29 மே 2026, 1:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைnational
உங்கள் கருத்து என்ன?



