குறட்டையைச் சாதாரணமாக எண்ண வேண்டாம், அது OSA-வாக இருக்கலாம் - நிபுணர்

28 மே 2026, 7:09 AM
குறட்டையைச் சாதாரணமாக எண்ண வேண்டாம், அது OSA-வாக இருக்கலாம் - நிபுணர்

கங்கார், மே 28 (பெர்னாமா) -- தூக்கத்தின் போது அடிக்கடி ஏற்படும் குறட்டையைச் சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது. ஏனெனில், அது 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' (OSA) எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் சுவாசத்தடைப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலைக்கு நீண்டகாலம் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரித்து, மரணத்திற்கும் வழிவகுக்கக்கூடும்.

இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் சுல்கிஃப்லி ஹமீர் பாசா கூறுகையில், தூக்கத்தின்போது சுவாசப் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது என்றார்.

OSA என்பது தூக்கத்தின்போது சுவாசப் பாதை முழுமையாகத் தடைபடுவதைக் குறிக்கிறது. இதனால் ஒருவர் குறைந்தது 10 வினாடிகளுக்கு மூச்சுவிடுவதை நிறுத்திவிடுவார். இது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் குறைத்து, கார்பன் டை ஆக்சைடு அளவை அதிகரிக்கிறது.

"இதயத்திற்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும்போது, அது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், மூளைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காதபோது, அது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்," என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவிடம் கூறினார்.

காலை வேளையில் அடிக்கடி தலைவலி, கவனம் செலுத்துவதில் சிரமம், போதுமான அளவு தூங்கியும் அதிகப்படியான தூக்கக்கலக்கம், மற்றும் உடல் எப்போதும் சோர்வாக உணர்வது ஆகியவை OSA-வின் முக்கிய அறிகுறிகளாகும் என்று டாக்டர் சுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

OSA உள்ளவர்களுக்குத் தரமான தூக்கம் கிடைப்பதில்லை. இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வதே இதற்குக் காரணம்.

"மூச்சு நின்றுவிடும்போது, இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து, கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, இரத்தத்தின் pH அளவு அமிலத்தன்மை கொண்டதாக மாறும். அப்போது, இரத்தத்தில் உள்ள சென்சார்கள் இந்த அசாதாரண நிலையைக் கண்டறிந்து, உடலை எழுப்பும்படி மூளைக்கு சமிக்ஞை அனுப்புகின்றன."

"இதனால், நோயாளி மூச்சுத் திணறல் போன்ற நிலையில் எழுந்து ஆக்சிஜனை சுவாசிப்பார் அல்லது புரைக்கேறி இருமல் ஏற்படும். இந்த நிலை தூக்கத்தைக் கெடுப்பதால், பகல் நேரங்களில் தலைவலி, அதிகத் தூக்கக்கலக்கம், மற்றும் கவனம் சிதறல் போன்றவை ஏற்படுகின்றன," என்று அவர் விளக்கினார்.

நோயாளிகள் அனுபவிக்கும் அறிகுறிகளின் அடிப்படையில், மருத்துவர்கள் 'ஸ்லீப் அப்னியா' தீவிரத்தன்மைக் குறியீட்டைப் (Sleep Apnea Severity Index) பெறுவதற்காக 'ஸ்லீப் டெஸ்ட்' (Sleep Test) எனப்படும் தூக்கப் பரிசோதனை
மேற்கொள்வார்கள். அதன் பிறகு பொருத்தமான சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

"இந்தப் பரிசோதனையை வீட்டிலேயே செய்யலாம் அல்லது மருத்துவமனையில் ஒரு இரவு தங்கி, மார்பில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய, இலகுரக இயந்திரத்தின் மூலம்
மேற் கொள்ளலாம்.

இந்த இயந்திரம் தூக்கத்தின்போது ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு மற்றும் நோயாளி எத்தனை முறை மூச்சுவிடுவதை நிறுத்துகிறார் என்பதைக் கண்காணிக்கும்," என்றார் அவர்.

இயந்திரத்தின் மெமரி கார்டில் பதிவுசெய்யப்
பட்ட தரவுகளை மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து OSA-வின் தீவிரத்தன்மையை நிர்ணயிப்பார்கள். குறியீட்டு அளவு 5-க்குக் கீழ் இருந்தால் அது இயல்பானது, 6 முதல் 15 வரை இருந்தால் இலேசானது, 16 முதல் 30 வரை மிதமானது, 30-க்கு மேல் இருந்தால் கடுமையான நிலை என்று வகைப்படுத்தப் படுகிறது.

டான்சில் அளவு பெரிதாக இருப்பது, மூக்கு அல்லது வாய்வழிப் பாதை குறுகலாக இருப்பது போன்ற சில காரணிகள் OSA-வுக்கு வழிவகுக்கின்றன. இருப்பினும், பெரும்பாலான உடல் பருமன் காரணமாகவே ஏற்படுகின்றன. கழுத்துப் பகுதியில் அதிகப்படியான கொழுப்புத் திசுக்கள் சேர்வதால் கழுத்து பெரிதாகி, சுவாசப் பாதையை அடைக்கிறது.

"நான் சந்தித்த பெரும்பாலான 'ஸ்லீப் அப்னியா' நோயாளிகள் அதிக உடல் எடை கொண்டவர்கள். தீவிர 'ஸ்லீப் அப்னியா' காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்ட 160 கிலோகிராம் எடை கொண்ட ஒரு நோயாளிக்கு நான் சிகிச்சை அளித்தேன்."

"அந்த நோயாளியின் 'ஸ்லீப் அப்னியா' தீவிரத்தன்மைக் குறியீடு 80-ஐ எட்டியது, இது மிகவும் கடுமையான வகையாகும். ஆனால், உடல் எடையைக் குறைத்த பிறகு, அந்த நோயாளி இப்போது எந்த அறுவை சிகிச்சையும் இன்றி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்," என்று அவர் கூறினார்.

எனவே, பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி, உடல் நிறை குறியீட்டெண்ணின் (BMI) அடிப்படையில் உடல் எடையை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டும். இது OSA-வைத் தவிர்க்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று டாக்டர் சுல்கிஃப்லி அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.